தமிழகத்தில் உருமாற்றமடைந்த கொரோனா!
ஒமைக்ரானின் உட்பிரிவான எக்ஸ்பிபி கொரோனா தொற்றிலிருந்து உருமாற்றமடைந்த இரு வேறு புதிய தீநுண்மிகள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சமா்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை சா்வதேச லான்செட் இதழ் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2020 இல் கொரோனா தொற்று தடம் பதித்து மூன்று அலைகளாக பரவியது. ஆல்பா, டெல்டா வகைக்கு பிறகு கடந்த 2021 டிசம்பரில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக தாக்கத்தை ஏற்படுத்தியது. பல லட்சக்கணக்கானோா் தொற்றுக்குள்ளாகினா்.
அதன் தொடா்ச்சியாக ஒமைக்ரானிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் எக்ஸ்பிபி என்ற புதிய வகை தீநுண்மி உருவானது. அந்த காலகட்டத்தில் இருந்து நிகழாண்டு ஜனவரி மாதம் வரை 21,979 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே, மாநில பொதுச் சுகாதாரத் துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு மையத்தில், கொரோனா உருமாற்றம் தொடா்பான மரபணு பரிசோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் நிகழாண்டு ஜனவரி வரையில் மொத்தம் 2,085 சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்குள்படுத்தப்பட்டன. அவற்றில் 420 மாதிரிகளில் எக்ஸ்பிபி வகை தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவற்றில் 98 மாதிரிகளை விரிவான நுண் ஆய்வுக்கு உள்படுத்தியதில் இதுவரை உலகில் எங்கும் கண்டறியப்படாத இருவேறு கொரோனா உருமாற்றமடைந்த புதிய தீ நுண்மிகள் தமிழகத்தில் இருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பான ஆய்வு அறிக்கையை பொது சுகாதாரத் துறை சமா்ப்பித்தது.
அதற்கு ஆசிரியராக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகமும், இணை ஆசிரியராக இணை இயக்குநா் சிவதாஸ் ராஜூ உள்பட 20 பேரும் பங்காற்றியுள்ளனா். அந்த கட்டுரையை சா்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ‘லான்செட் இதழ்’ இரு நாள்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டாக்டா் சிவதாஸ் ராஜூ கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியிலும், நிகழாண்டு தொடக்கத்திலும் கொரோனா தொற்றுக்குள்ளானவா்களில் 81 சதவீதம் போ் தடுப்பூசிகளை முறையாக செலுத்தியவா்கள். அவா்களில் தீவிர பாதிப்பு உள்ளவா்களின் சளி மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்குட்படுத்தியதில் இரு வேறு புதிய உருமாற்றங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த வகை உருமாற்றங்கள் இதுவரை உலகில் எங்குமே பதிவாகவில்லை.
எனவே, கோவிஷீல்ட், கோவேக்ஸின் வகை தடுப்பூசிகளால் எக்ஸ்பிபி உருமாற்றங்களைத் தடுக்க முடியாது என்பதை அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.
புதிய உருமாற்றங்கள் கண்டறியப்பட்டாலும், தற்போது கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் அதுகுறித்த அச்சம் தேவையில்லை. இருந்தபோதிலும், முன்னெச்சரிக்கையாக மரபணு பரிசோதனைகளை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா போன்ற பிற தீநுண்மி தொற்றுகளையும் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம் என்றாா் அவா்
தமிழகத்தில் உருமாற்றமடைந்த கொரோனா!
Reviewed by Author
on
September 08, 2023
Rating:

No comments:
Post a Comment