வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையே புறக்கணிக்கப்பட்டுள்ளது-பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் தெரிவிப்பு
வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலை களுக்குள் கட்டிட ரீதியாகவும், ஆளணித்துவ ரீதியாகவும்,அதே நேரம் சிகிச்சை உபகரணங்கள் ரீதியாகவும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா அபிவிருத்தி குழுவின் தலைவருமான கே.திலீபன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பொது வைத்தியசாலையில் குறைபாடுகள் தொடர்பில் பார்வையிடுவதற்காக நேற்றைய தினம் (3) மாலை பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்
குறித்த விஜயத்தின் போது மன்னார் பொது வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் யோகேஷ்வரனுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் நேரடியாகவும் பார்வையிட்டிருந்தார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்....
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள், வள பற்றாக்குறைகள் காணப்படுகின்ற போதிலும் பல சிரமங்களுக்கு மத்தியில் வைத்தியர்கள் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகின்றனர்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முன்னுரிமை அடிப்படையில் மன்னார் வைத்தியசாலையில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் என்னால் பெற்று தர முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இம்மாதம் மற்றும் வருகின்ற மாதத்தில் முன் வைக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின் கூட்டங்களின் போது மன்னார் வைத்தியசாலையில் தீர்க்கப்பட வேண்டிய மிக முக்கிய பிரச்சினைகளை ஆளமாக முன்வைத்து வைத்தியசாலையின் தேவையை நிச்சயமாக பெற்றுத் தருவேன் என அவர் தெரிவித்தார்
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையே புறக்கணிக்கப்பட்டுள்ளது-பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் தெரிவிப்பு
Reviewed by Author
on
November 04, 2023
Rating:

No comments:
Post a Comment