முல்லைத்தீவு மாவட்டத்தில் காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாறுபாட்டிற்கான மீள்தன்மையினை உருவாக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று , புதுக்குடியிருப்பு மற்றும் வெலிஓயா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள வலிமை குறைந்த சமூகங்களின் மத்தியில் காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாறுபாட்டிற்கான மீள்தன்மையினை உருவாக்கும் UN-Habitat திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடியை தொழிலாக கொண்ட வலிமை குறைந்த சமூகங்களினால் காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாறுபாட்டிற்கான மீள்தன்மையினை உருவாக்கும் செயற்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்தும் செயற்திட்டங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமையவுள்ளது. இத்திட்டம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபா 600 மில்லியன் ) செலவில் இரண்டு வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக முக்கிய தேவைகளாக கருத்தப்படும் சிறியளவிலான உட்கட்டமைப்பு வசதிகள், காலநிலை மற்றத்தினால் ஏற்ப்படும் பாதிப்புகளுடன் தொடர்புபட்ட உப்பு நீர் உட்புகுதலை தடுக்கும் அணைகள், குளங்கள் புனரமைப்பு, விவசாயிகள் மற்றும் மீனவ சமுதாயத்தின் வருமான அதிகரிப்பிற்கு ஏற்ற வாழ்வாதாரத்திற்கான பயிற்சிகள் உபகரணங்களை வழங்குதல் உட்பட பல விடயங்கள் இத் திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் , வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் திட்டமிடல் எம்.கிருபாசுதன், UN-Habitat இன் செயற்றிட்ட முகாமையாளர், பொறியியலாளர் எம்.எஸ்.எம். அலீம், கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் ஆலோசகர், திருமதி. செஜின் கிம், பிரதிச் செயற்றிட்ட முகாமையாளர், எஸ்.எல். அன்வர் கான்,
மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. க.ஜெயபாவனி, பிரதேச செயலாளர்கள், UN-Habitat நிறுவனத்தின் அதிகாரிகள், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உயரதிகாரிகள், சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாறுபாட்டிற்கான மீள்தன்மையினை உருவாக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு.
Reviewed by NEWMANNAR
on
December 08, 2023
Rating:

No comments:
Post a Comment