அண்மைய செய்திகள்

recent
-

14 ஆண்டுகளுக்கு மேலாக தீர்வு கிடைக்காமல் இருக்கும் கிழக்குத் தமிழர்களின் காணி மீட்பு போராட்டம்

 >யுத்தத்தால் இடம்பெயர்ந்த, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், மீண்டும் தமது சொந்த நிலத்தில் மீளக் குடியேற அதிகாரிகள் தொடர்ந்து தடை விதித்து வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.  


யுத்தம் நிறைவுக்கு வந்த கடந்த 2009ஆம் ஆண்டு முதல், கடந்த 14 வருடங்களாக சொந்த நிலத்தில் மீளக்குடியேறுவதற்கான தமது போராட்டம் தொடர்வதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்கும், காணிகளை விடுவிப்பதற்கும்,  வடமாகாணத்தில் எஞ்சியிருக்கும் இடைத்தங்கள் முகாமில் தங்கியுள்ளவர்களை மீள் குடியேற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருதாக வெளிவிவார அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட பிரிவில் பெப்ரவரி 27ஆம் திகதி உரையாற்றியிருந்தார்.


அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கனகர் கிராமத்தைச் சேர்ந்த 278 குடும்பங்கள், தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி அமைச்சர் உரையாற்றிய தினத்திற்கு முதல்நாள் (பெப்ரவரி 26) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தன.


கனகர் கிராமத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள், பொத்துவில் பிரதேச செயலகம் முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


தமக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் விடுவிக்க மறுப்பதாக அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


பல வருட போராட்டத்தின் பின்பு இந்த வருடம் தைப்பொங்கல் தினத்தன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் 73 பேருக்கு மாத்திரம் காணி உரிமை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.


எனினும்,  ஏனையவர்களுக்கும் காணி உரிமையை வழங்குமாறு அந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


 “தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். எங்களைப் போட்டு வதைக்காதீர்கள். எங்களுக்கு இருப்பதற்கு காணி இல்லை ஒரு குடும்பத்திற்குள் 3, நான்கு குடும்பங்கள் இருக்கு. கிராம சேவகர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும் எங்களது நிலைப்பாடுகள். எங்களுடைய காணியை மாத்திரம் தாருங்கள். வேறு ஒன்றையும் நாம் அரசாங்கத்திடம் கேட்கவில்லை.” என போராட்டத்தில் ஈடுபட்ட தாய் ஒருவர் கோரியுள்ளார்.


போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பொத்துவில் பிரதேச செயலாளர் எம். ஐ. பிர்னாஸ், 73 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டியதோடு, ஏனைய மக்களுக்கான காணிகள் அடையாளம் கண்டு, அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.


மீள்குடியேறும் முயற்சி


நாட்டில் இடம்பெற்ற மோதல் காரணமாக 1990ஆம் ஆண்டு, கனகர் கிராமத்தைச் சேர்ந்த 278 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி, திருக்கோயில், பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருந்தனர்.


யுத்தம் நிறைவடைந்த பின்னர், 2009ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில்,  கனகர் கிராமத்துக்கு அந்த மக்கள் திரும்பியவேளை, தாம் வாழ்ந்த மற்றும் விவசாயம் செய்த காணிகளின் ஒரு பகுதியை வன பாதுகாப்புத் திணைக்களம் தமக்குரியது எல்லையிட்டிருந்ததோடு எஞ்சிய பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.


இந்த நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்ற மக்கள் சட்ட ரீதியாக தமது காணிகளை விடுவிக்கும் முயற்சிகளை முன்னெடுத்ததாக பிராந்திய ஊடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


எனினும் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், காணிகளை விடுவிக்குமாறு கனகர் கிராம மக்கள் அவ்வப்போது போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும் எவரும் அந்த மக்களுக்கு உரிய தீர்வினை வழங்கவில்லை என அந்த பிரதேச ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி முதல் அந்த மக்கள் ஆரம்பித்த தொடர் போராட்டம் 500 நாட்களை நெருங்கிய நிலையில் 2020ஆம் ஆண்டு இறுதியில் அரசியல்வாதிகள் மற்றும் பிரதேச அரச அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து நிறைவுக்கு வந்தது.


அப்போதைய ஜனாதிபதி கோாட்டாபய ராஜபக்சவின் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் நிலங்களை விடுவிக்கும் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக பொத்துவில் கனகர் கிராம மக்களின் காணியும் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


முதற்கட்டமாக எல்லைகளை கண்டறியும் செயற்பாடுகளை நில அளவைத்திணைக்களம் ஆரம்பித்திருந்தது. எனினும் அந்தப் பணி பின்னர் கிடப்பில் போட்டப்பட்டது.  


எவ்வாறெனினும் இதுவரை தமது பூர்வீக காணிகணை விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


கிராம் எப்போது உருவாக்கப்பட்டது?


கனகர் கிராமம் சமுளை மரங்கள் நிறைந்த சமுளஞ்சேனையாகத்தான் இருந்திருக்க வேண்டுமென பிரதேச ஊகடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் காடுகள் வெட்டப்பட்டு, சேனைப்பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


1960 - 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக குடும்பங்கள் குடியேறிய நிலையில் முழு கிராமமாக அந்த பிரதேசம் மாறியுள்ளது.


1981ஆம் ஆண்டு, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான காலஞ்சென்ற எம்.சி.கனகரெத்தினம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக, 30 வீடுகளை அமைத்து, கனகர் கிராமம் என்ற பெயரையும் சூட்டியுள்ளார்.


அதன் பின்னர் குடும்பங்கள் விரிவடையவே குடியிருப்புகளும் பெருகியுள்ளன.


1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிராமத்தில் சுமார் 278 குடும்பங்கள் வசித்து வந்துள்ளதோடு, ஒரு குடும்பத்திற்கு மூன்று முதல் ஐந்து ஏக்கர் வரையில் காணிகள் இருந்ததாகவும் கனகர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


கனகர் கிராமம் தற்போது பெரும் காடுபோல் காட்சியளித்தாலும், பாழடைந்து இடிந்துபோயுள்ள நிலையில் குடியிருப்புகள் காணப்படுவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 


14 ஆண்டுகளுக்கு மேலாக தீர்வு கிடைக்காமல் இருக்கும் கிழக்குத் தமிழர்களின் காணி மீட்பு போராட்டம் Reviewed by Author on March 01, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.