வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட நிலையில் விடுதலையான பேரும் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு
வெடுக்கு நாறி மலையில் கைது செய்யப்பட்டு விடுதலையான 8 பேரும் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாட்டின் போது ஆலய பூகசர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யபட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டு, இன்று (19.03) அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்டதும் 8 பேரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த போது அவர்களது உறவினர்கள், மனைவிமார், பிள்ளைகள் அவர்களை கட்டி ஆரத்தழுவி கண்ணீர் மல்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதன்போபது கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும், கைதாகி விடுதலையானவர்களும் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இது தொடர்பில் கைதாகி விடுதலையான எஸ்.தவபாலசிங்கம் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது,
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மிகவும் அநீதியான முறையில் நாம் கைது செய்யப்பட்டிருந்தோம். பொலிசார் வேணும் என்றே எம் மீது பொய் வழக்கு போட்டு 12 நாட்கள் விளக்கமறியலில் இருந்து விடுதலையாகியுள்ளோம். பொலிசாரினால் முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை. எங்களுடைய விடுதலைக்காக பல உறவுகள் தொடர்ச்சியாக குரல் கொடுத்துள்ளார்கள். மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், புலம்பெயர் உறவுகள் எனப் பலரும் குரல் கொடுத்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சட்டத்தரணிகள் எமக்காக போராடி இருந்தார்கள். வவுனியாவிலும், நெடுங்கேணியிலும் பெரியளவிலான போராட்டம் நடைபெற்றது. அதில் பலரும் பங்குபற்றி எமக்காக குரல் கொடுத்திருந்தார்கள். எமக்காக குரல் கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். வெடுக்குநாறி மலை எங்களது சொத்து அதை நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment