ஒரு மாதம் கடந்த நிலையிலும் கல்முனையில் தமிழர்களின் தொடர் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை
ஒரு மாதம் கடந்த நிலையிலும் கல்முனையில் தமிழர்களின் தொடர் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை
சுமார் 40 வருடங்களாக கிழக்கில் இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை, முழு அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக உருவாக்கி அப்பிரதேசத்தில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்களை அவர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகளில் இருந்து விடுவிக்குமாறு அரசை வற்புறுத்தி ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்திற்கு தீர்வு வழங்க ஒரு மாதம் கடந்துள்ள போதிலும் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை இன்றும் (ஏப்ரல் 25) முன்னெடுப்பதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், முழு அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படாமையால் அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டம் யாருடைய உரிமையையும் பறிக்கும் போராட்டம் அல்ல என போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அப்பிரதேச சிவில் சமூக ஆர்வலர் தாமோதரம் பிரதீபன் நேற்று (ஏப்ரல் 24) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“இந்த போராட்டம் யாருக்கும் எதிரான போாட்டம் கிடையாது. யாருடைய உரிமைகளையும் பறிக்கின்ற போராட்டம் கிடையாது. யாருடைய எதனையும் கேட்கின்ற போராட்டம் கிடையாது. மாறாக 93ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான முழுமையான அதிகாரங்களை வழங்க வேண்டுமெனக் கோரியே நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்."
பல தசாப்தங்களாக அப்பகுதி மக்கள் அத்தியாவசிய அரச சேவைகளைப் பெறுவதில் தடை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
"மூன்று தசாப்தங்களாக, கல்முனை வடக்கு மக்கள் தீர்க்கப்படாத சவால்களுடன் போராடி வருகின்றனர், இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளை அணுகுவதில் குறிப்பிடத்தக்க வகையில் தடையாக உள்ளது, இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது."
அரசாங்க அதிகாரிகளின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளினால் தமிழ், முஸ்லிம் சமூகத்தினரிடையே முறுகல் நிலை அதிகரித்து முரண்பாடுகள் ஏற்படக் கூடும் என தமிழ் மக்கள் பிரதிநிதி தனது கடிதத்தில் பிரதமருக்கு மேலும் தெரிவித்திருந்தார்.
“எமது கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை, மேலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகமாக தரமிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகமாக தரமிறக்குவதற்கான இந்த நோக்கமும், கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினால் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் கலவரமும் மோதலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ”
மாவட்டச் செயலாளரும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் கல்முனை வடக்கு “உப” பிரதேச செயலகமாக குறிப்பிட்டு செயற்படுவதை நிறுத்த வேண்டும் என சிவில் சமூக ஆர்வலர் தாமோதரம் பிரதீபனும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு பிரதேச செயலகமாக இயங்கக்கூடாது என்ற முனைப்போடு பலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக மாவட்ட செயலாளர் அதேபோன்று கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் தாங்கள் எழுதுகின்ற கடிதங்களை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் என எழுதுகின்ற முயற்சி நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே போராடிக்கொண்டிருக்கின்றோம்.”
அம்பாறை மாவட்டத்தில் 1986ஆம் ஆண்டு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஸ்தாபிக்கப்பட்டதுடன், 1993ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய அந்த உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக மாற்றத் தீர்மானிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, அன்றைய காலப்பகுதியில் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண அரச செயலாளராகப் பணியாற்றிய எஸ்.ஏ. ஒபதகே கல்முனை பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்தும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தமது நிர்வாகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளதாக கல்முனை வடக்கு பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் நிதி மற்றும் காணி அதிகாரங்களை இழந்து தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதியை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு மாதம் கடந்த நிலையிலும் கல்முனையில் தமிழர்களின் தொடர் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை
Reviewed by NEWMANNAR
on
April 26, 2024
Rating:

No comments:
Post a Comment