மன்னாரில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக சுவீகரிக்கும் கம்பனிகள்
மன்னார் தீவக பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான காணிகளை தொடர்சியாக சில தனியார் கம்பனிகள் சட்டவிரோதமாக சுவீகரிக்கும் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றது
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் கலந்தாலோசிக்கும் முகமாக மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் பாதிக்கப்பட்ட தனியார் காணி உரிமையாளர்களுக்குமான சந்திப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை மெசிடோ காரியாலயத்தில் இடம் பெற்றுள்ளது
குறித்த கலந்தாலோசிப்பில் மன்னார் நடுக்குடா,கொன்னையன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் பாரம்பரியமாக தாங்கள் வசித்துவரும் காணிகளை தனியார் நிறுவனங்கள் தொடர்சியாக அடாத்தாக வேலிகள் அடைத்து கையகப்படுத்துவதாகவும் இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்தாலும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பது இல்லை என தனியார் காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்
அதே நேரம் தனி காணி ஒன்றை கொள்வனவு செய்யும் சில நிறுவனங்கள் அந்த காணிகள் மாத்திரம் இன்றி அதை சூழ உள்ள காணிகளையும் சுவீகரிப்பதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர்
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிகைகள் தொடர்பில் தனியார் காணி உரிமையாளர்களுக்கு சட்டத்தரணி சுமந்திரனால் தெளிவுபடுத்தப்பட்டதுடன் குறித்த பிரச்சினை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயாரிப்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது
அதே நேரம் இம்மாதம் இவ்வாறு சட்டவிரோதமாக காணி சுவீகரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனத்திற்கு எதிராக முதல் கட்டமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக இவ்வாறு தனியாருக்கு சொந்த காணிகள் தனி நபர்களாலும் சில நிறுவனங்களாலும் அபகரிக்கப்பட்டு கணிய மணல் அகழ்வுக்கு வழங்குவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
May 23, 2024
Rating:


No comments:
Post a Comment