பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி மீட்பு
பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு பாதாள அறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமியை புத்தல பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குறித்த சிறுமியை அவரது காதலன் என்று கூறப்படும் 20 வயது இளைஞன் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புத்தல கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றுக்கு வந்த மூன்று இளைஞர்கள், அங்கு உறங்கிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை கடந்த ஒன்பதாம் திகதி இரவு கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தலை தடுக்க முயன்ற சிறுமியின் தந்தையின் கையை இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறுமியின் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும், கடத்தப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் போயிருந்தது.
எவ்வாறாயினும், நீண்ட விசாரணையின் போது, பிரதான சந்தேக நபருடன் சிறுமியை கடத்த வந்த மற்ற இரு இளைஞர்களையும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது.
அதன்படி, இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில், கடத்தப்பட்ட சிறுமியை புத்தல புறநகர் பகுதியில் உள்ள பிரதான சந்தேகநபரின் மாமாவின் வீட்டின் பாதாள அறை ஒன்றில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டுள்ளனர்.
குறித்த சிறுமியை அடைத்து வைப்பதற்காக கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே இந்த அறை தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐந்து அடி உயரமும், ஆறு அடி அகலமும் கொண்ட இந்த அறை, காற்றோட்டத்திற்காக இரண்டு சிறிய துளைகள் மட்டுமே இருந்துள்ளன. மேலும், வீட்டின் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment