வவுனியாவில் நாய்கள் பராமரிப்பு காப்பகத்திற்கு மக்கள் எதிர்ப்பு
வவுனியா மகாரம்பைக்குளம் பகுதியில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகை தந்த பெண்ணையும வீதி ஓரங்களில் நிற்கும் நாய்களை பராமரிப்பதற்கு காப்பகத்தை தனது காணியில் மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நோர்வே நாட்டில் இருந்து வருகை தந்த பெண்மணி ஒருவர் வவுனியாவில் வீதி ஓரங்களில் பராமரிப்பின்றி காணப்படும் நாய்களை தனது செலவில் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை தனது காணியில் மேற்கொண்டு வந்தபோது குறித்த செயற்பாட்டினால் கிராமத்தில் வாழும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் எனவும் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்து இப்பகுதியைச் சூழல் உள்ள மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.
குறித்த பகுதிக்கு வருகை தந்த மகாரம்பைகுளம் பொலிசார் இரு தரப்பினரையும் அழைத்து இது தொடர்பில் அனுமதி பெறப்பட்டதா என கேள்வி எழுப்பியிருந்தனர்.எனினும் நாய் காப்பகத்தின் உரிமையாளரான குறித்த பெண்மணி தான் இவ்வாறான ஒரு காப்பகத்தை உருவாக்குவதற்கு அனுமதி பெறவில்லை எனவும் அது தொடர்பிலான கடிதங்கள் தன்னால் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை வீதி ஓரங்களில் கவனிப்பாறின்றி நிற்கும் நாய்களையே தான் இவ்வாறான ஒரு காப்பகத்தின் மூலமாக பாதுகாப்பாக வளர்ப்பதற்கு முனைந்ததாகவும் தெரிவித்திருந்ததோடு அதற்கான சகல ஏற்பாடுகளையும் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பொது மக்கள் பொலிஸாரிடம் கருத்து தெரிவிக்கையில்,
தாம் இவ்வாறான ஒரு காப்பகத்தை அமைப்பதற்கு எதிரானவர்கள் இல்லை என்றும் ஆனால் இது சீராக பராமரிக்கப்படாமல்விட்டால் இப்பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு நோய்கள் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் குறித்த பெண் வெளிநாட்டில் இருந்து வந்து இதனை செய்வதனால் அவர் மீண்டும் வெளிநாடு சென்ற பின்னர் இங்கு இருப்பவர்கள் அதனை சீராக பராமரிக்காவிட்டால் இந்த பிரதேசத்தில் இருப்பவர்களே அதனால் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்ததோடு குறித்த திட்டத்தை மக்கள் நடமாட்டம் அற்ற பகுதியில் மேற்கொள்வதற்கு தாமும் ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தனர்.
எனினும் இரு தரப்பினர் உடைய நியாயப்பாடுகளையும் அறிந்த பொலீசார் குறித்த நாய் காப்பகத்திற்கு சென்று அங்கு நடைபெறும் வேலை திட்டங்களையும் பார்வையிட்டு இருந்தனர்.
மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் அது தொடர்பாக அனுமதியைப் பெற்று காப்பகத்தை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்த நிலையில் இருதரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் அதேவேளை இந்த நாய் காப்பதற்காக உடனடியாக அனுமதியைப் பெற்று அதனை செயல்படுத்துமாறும் தெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்து அப்போது மக்கள் குறித்த பகுதியிலிருந்து சென்றதோடு இது தொடர்பாக பொலிஸார் தமது அவதானத்தையும் செலுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment