திருடிய பஸ்ஸில் தப்பிச் சென்றவர் கைது !
பாணந்துறை, மினுவன்பிட்டிய மயானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை திருடி பஸ்ஸுடன் தப்பிச் சென்ற சந்தேக நபரொருவர் பாணந்துறை தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவன்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
திருடப்பட்ட பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் இரவு நேர பயணத்தை முடித்துக் கொண்டு பாணந்துறை மினுவன்பிட்டிய மயானத்தின் அருகில் பஸ்ஸை நிறுத்திவிட்டு வீடு சென்றுள்ளனர்.
மறுநாள் காலை பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் வழமை போன்று பயணிகள் போக்குவரத்திற்காக பஸ்ஸை எடுக்க சென்றபோது, அந்த இடத்தில் பஸ் இல்லாததால் பஸ்ஸின் உரிமையாளருக்கு இதுபற்றி தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, இது தொடர்பில் பஸ்ஸின் உரிமையாளர் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை தெற்கு பொலிஸார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னர் இந்த பஸ்ஸின் சாரதியாக பணியாற்றியுள்ள நிலையில், பஸ்ஸின் உரிமையாளர் அவரை சேவையிலிருந்து நீக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதற்காக இந்த பஸ் திருடப்பட்டது என்பது தொடர்பில் சந்தேகநபர் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment