அனுரகுமார ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இரத்த ஆறுதான் ஓடும்: தினேஷ் எச்சரிக்கை
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கொலையாளி. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகவாதி. இருவரில் எவர் வேண்டும் என்பதை எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். தவறியேனும் அனுரகுமார ஆட்சிக்கு வந்தால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறுதான் ஓடும்." - என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கெஸ்பேவவில் 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களின் ஆதரவைக் கோரியுள்ளார். மக்களும் பெருமளவில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கின்றார்கள்.
நாடாளுமன்றத்தில் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளினதும் மக்களினதும் நம்பிக்கையை ஜனாதிபதி உறுதி செய்திருக்கின்றார்.
இதுவரையில் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே முன்மொழிந்திருக்கின்றார். நாட்டின் கல்வித்துறைக்கும் கல்வியல் கல்லூரி போன்ற விடயங்களை அவர் அறிமுகப்படுத்தினார்.
இவ்வாறு இலங்கையில் புதுமையான முயற்சிகளை சாத்தியமாக்கிக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே முடியும்.
தவறியேனும் இந்த நாட்டில் மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்தால் மூன்று எம்.பிக்களை வைத்துக்கொண்டு ஜனநாயக ஆட்சி செய்யும் இயலுமை அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இல்லை.
எனவே, அவர் தன்னிச்சையான அதிகாரங்களுடன் செயற்பட முயற்சிப்பார். ஆகவே, நாட்டில் ஆட்சி அதிகாரத்தைச் செயற்படுத்தக்கூடிய நாடாளுமன்ற அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமே உள்ளது.
இம்முறை பெருமளவான புதிய வாக்காளர்கள் பதிவாகியிருக்கும் நிலையில் நாட்டின் எதிர்காலத்தைச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்." - என்றார்.
Reviewed by Author
on
September 13, 2024
Rating:


No comments:
Post a Comment