மன்னார் காற்றாலையை அமைக்கும் அதானியின் திட்டம் கைவிடப்படுமா?: புதுடில்லி செல்லும் அரச உயர்மட்ட குழு
இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணி தொடர்பில கலந்துரையாடல்களை நடத்த எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு ஆரம்பகட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டத்தின் ஊடாக 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.
என்றாலும், இத்திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியிருந்ததுடன், தற்போதைய அரசாங்கமும் இத்திட்டத்தை மீள் பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி இதுதொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தும் இருந்தார்.
காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு கடந்த அமைச்சரவை வழங்கிய அனுமதியை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி வனஜீவராசிகள், இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உள்ளிட்ட சில தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் திட்டத்தை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை உயர்நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு இடையே காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் குறித்து ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் கலந்துரையாடலை நடத்த உள்ளது.
பொதுத் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த இலங்கை அரசாங்கத்துக்கு புதுடில்லியில் இருந்து அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
Reviewed by Author
on
October 31, 2024
Rating:


No comments:
Post a Comment