அனைத்து துப்பாக்கிகளையும் மீளப் பெற தீர்மானம்: பாதுகாப்பு அமைச்சு காலக்கெடு
பொது மக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளையும் மீளப்பெறுவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
1916ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் 6(1) மற்றும் 6(2) பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் தற்காலிகமாக துப்பாக்கிகளை கையகப்படுத்துவற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முடிவு குறித்து மறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே உரிமையாளர்களிடமிருந்து துப்பாக்கிகளை மீளப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை அடுத்தமாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் வெலிசரயில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு அலுவலகத்திடம் துப்பாக்கிகள் கொள்முதல் பிரிவு அதிகாரிகள் வழங்கிய ஏற்புச் சீட்டின் நகலை ஒப்படைக்க வேண்டும்.
குறித்த கால அவகாசத்துக்கு முன்னர் தமது துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீள ஒப்படைக்க தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சொத்து, பயிர், விளையாட்டு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் துப்பாக்கிகளுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment