யாழில் தியாக தீபத்தை வழிபட்ட தமிழ் மக்கள் கூட்டணி: வேட்புமனுவை கையளித்து
தமிழ் மக்கள் கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை இன்று புதன்கிழமை கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனுவை இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.
இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் கூட்டணியினர், வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் வேட்பாளர்கள் யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிதறு தேங்காய் அடித்தும் வழிபாடு செய்தனர்.
யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வேட்பாளர்களாக விஸ்வலிங்கம் மணிவண்ணன், வரதராஜன் பார்த்தீபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தம் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி, மிதிலைச்செல்வி ஶ்ரீ பத்மநாதன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
Reviewed by Author
on
October 09, 2024
Rating:


No comments:
Post a Comment