வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் கவனம் தேவை - பிரதமர் ஹரிணி
வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் ஊடக அறிக்கையிடலில் கவனம் தேவையென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் உலகளாவிய செயல்முனைவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் பாராளுமன்றத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பெண் பணியாளர்கள் செம்மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தனர்.
முதலாவதாக "பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” எனும் வாசகம் தங்கிய கைப்பட்டி குழுக்களில் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர உள்ளிட்ட பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றிய அங்கத்தவர்களால் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான கயந்த கருணாதிலக்க ஆகியோருக்கும் இந்த கைப்பட்டி அணிவிக்கப்பட்டது. இதன்போது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் பங்கேற்றிருந்தார்.
அதனையடுத்து, ‘பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” எனும் வாசகம் தங்கிய கைப்பட்டி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி சபாநாயகர் கௌரவ வைத்திய கலாநிதி ரிஸ்வி சாலி ஆகியோருக்கும் அணிவிக்கப்பட்டது.
அத்துடன், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கைப்பட்டி மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழித்தல் மற்றும் பாலின அடிப்படையிலான சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலான பொது உறுதிமொழி அடங்கிய பத்திரமும் இங்கு வழங்கப்பட்டது.
அதனையடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிடுகையில்,
வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தொடர்பான செய்திகள் சித்திரக்கதைகள் அல்ல, வாழ்க்கை தொடர்பான விடயங்கள் என்பதால் அவை தொடர்பான ஊடக அறிக்கையிடல்களில் கவனம் தேவை எனவும் தெரிவித்தார்.
பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் அறியாதவர்களால் அல்ல என்றும் மிகவும் நெருக்கமானவர்களால் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் குறிப்பிடுகையில்,
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக 1938 எனும் இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவித்தார்.
அவ்வாறான வன்முறைகள் தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்கள் மீதான கணினி ஊடாக மேற்கொள்ளும் குற்றங்கள் தொடர்பின் கடினமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு பாராளுமன்றத்தில் முன்னுதாரணமாக பணியாற்றுவது பொறுப்பானது எனவும், நாட்டில் சட்டம் இயற்றும் பொறுப்பு காணப்படும் இடமான பாராளுமன்றத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அபிமானம், கௌரவம் நாட்டின் அனைத்துப் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் அபிமானம் மற்றும் கௌரவத்தை தீர்மானிக்கும் பிரதான இடமாகும் என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment