குமார் பொன்னம்பலம் நினைவேந்தலில் ஒற்றையாட்சிக்கு மீண்டும் சவால்
இலங்கைக்கான ஒற்றையாட்சியை இல்லாதொழிக்கும் புதிய அரசியலமைப்பைக் கோரும் வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சியொன்று மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மீண்டும் உறுதியளித்துள்ளது.
“50 ஆயிரம் மாவீரர்கள் உயிர்கொடுத்துள்ளனர். ஒன்றரை இலட்சம் மக்கள் இறுதிப் போரில் மாத்திரம் உயிர் கொடுத்துள்ளார்கள். இந்த தியாகங்களுக்கு பின்னர் எங்களுக்கான அரசியல் தீர்வு எனப்படுவது ஒற்றையாட்சியை நிராகரித்து குறிப்பாக 2016ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வரும் யாப்பு அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுடைய எங்களது தேசம், இறைமை, சுயநிர்ண உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமூக ஒப்பந்தம் ஒன்று எழுதப்பட வேண்டும். அந்த ஒப்பந்தம் தமிழர் தேசம் மற்றும் இறைமையை அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும்.”
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் தலைநகரில் 25 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், பிரபல சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் ஒற்றையாட்சியையும் பௌத்த மதத்தின் முதன்மையையும் பாதுகாக்கும் மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை இலங்கையின் புதிய அரசியல் அமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்ற குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தென்னிலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவது முட்டாள்தனமானது எனக் குறிப்பிட்டார்.
“சிங்கள பௌத்த பேரினவாதம் தானே தனக்கு குழி தோண்டி ஊழல்களை செய்து, மேசாடிகளை செய்து அதிகார துஷ்பிரயோகங்களை செய்து பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ள நிலைமையில் இந்த வீழ்ந்த இடத்திற்குள் வைத்துக்கொண்டு எவ்வளவு தீவிரமான நெருக்கடிகளை கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு கொடுத்தால் மாத்திரமே தமிழர்களை அரவணைக்க வேண்டும். இலங்கையில் ஒரு ஸ்திரதன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் உரிமைகளை தருவது பற்றி சிந்திப்பார்கள். இல்லையென்று சொன்னால் அவர்கள் பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொள்வார்கள் எனின் வாழ்க்கையில் தமிழர்களுக்கு உரிமை கிடைக்காது. ஆகவே நாங்கள் அவர்களுக்கு காலஅவகாசம் கொடுப்பது பற்றி சிந்திப்பது முட்டாள்தனம்.”
சுயநிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வை எட்டுவதற்கு தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஜனநாயக அரசியல் இயக்கத்தை விரைவாக கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
“எவ்வளவு தீவிரமாக மக்களை அணிதிரட்டி எங்களுக்கு உரிமை வேண்டுமென்ற தீவிரமான ஒரு ஜனநாயக அரசியல் இயக்கத்தை வலுப்படுத்த முடியுமோ, அதனை எவ்வளவு வேகப்படுத்த முடியுமோ அதுதான் எங்கள் விடுதலையை நாங்கள் விரைவுப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும். இந்த உரிமைகள் உடனடியாக தரப்பட வேண்டும். எங்களது தேசம், இறைமை, சுயநிர்ண உரிமை, அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு வேண்டும். நாங்கள் விரும்புகின்ற அடிப்படையில் அந்த அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அதற்கான நெருக்கடியை தாயகத்திலும் சர்வதேச அளவிலும் ஏற்படுத்துவதற்கு நாங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.”
குமார் பொன்னம்பலத்தின் 25ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில் அவரது புதல்வரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நினைவுச்சுடரை ஏற்றி வைத்தார். நினைவுப் பேருரையை யாழப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரகுராம் அவர்கள் 'மக்கள் மயப்படுத்தவேண்டிய அரசியல்' என்ற தலைப்பில் ஆற்றினார்.
தென்னிலங்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த அஞ்சாத தலைவர் குமார் பொன்னம்பலம் என, நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் குறிப்பிட்டார்.
“அதிகாரப் பங்கீடு வேறு, அதிகாரப் பரவலாக்கம் வேறு என்பதிலே குமார் பொன்னம்பலம் தெளிவான சிந்தனை கொண்டிருந்நதார். தமிழர்களாகிய நாங்கள் கேட்பது அதிகார பங்கீடேத் தவிர அதிகாரப் பரவலாக்கம் அல்ல என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். தமிழ் தேசத்தில் மாத்திரமல்ல சிங்கத்தின் குகை்குள்ளே நின்றுகொண்டு உரைத்தார்.”
நாட்டில் தற்போதுள்ள அரசியலமைப்பின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதை குமார் பொன்னம்பலம் தெளிவாக புரிந்து கொண்டிருந்ததாகவும் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் இதன்போது வலியுறுத்தினார்.
“பல சட்டத்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள் விடுகின்ற தவறு என்னவென்றால் தாம் கற்ற கோட்பாடுகளுக்குள்ளே, தாங்கள் கற்ற சித்தாந்தத்திற்குள்ளே, தாங்கள் கற்ற இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பிற்குள்ளே தமிழர்களுக்கான தீர்வை தேடித் திரிகின்றார்கள். குமார் பொன்னம்பலம் ஐயா அந்த தவறை செய்யவில்லை. தான் படித்த இலங்கை சட்டத்திலேயோ, தான் படித்த இலங்கையின் அரசியல் யாப்புக்குள்ளேயோ அல்லது தான் தொழில் புரியும் நீதிமன்ற முறைமைக்குள்ளேயோ தமிழர்களுக்கான நீதியும் இல்லை, தீர்வும் இல்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்துகொண்டிருந்தார்.”
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் தலைநகர் கொழும்பில் கொல்லப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் நிகழ்வில், இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள், தமிழ் ஊடக நிறுவனங்களின் பணிப்பாளர்கள், பத்திரிகைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கொலை நடந்து 25 வருடங்களாகியும் குமார் பொன்னம்பலத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்பதோடு, விசாரணைகளை விரைந்து முடிக்க அரசாங்கம் தெரிவு செய்துள்ள நிலுவையிலுள்ள ஏழு வழக்குகளில், ஜனவரி 5, 2000 அன்று சுட்டுக்கொல்லப்பட்ட குமார் பொன்னம்பல கொலை வழக்கு உள்ளடக்கப்படவில்லை.

No comments:
Post a Comment