அண்மைய செய்திகள்

recent
-

"இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதிபடுத்துக" இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சி வலியுறுத்தல்

 இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  இலங்கையில் தமிழர்கள் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


இந்தியா முழுவதும் ஆதரவாளர்கள் நிரம்பியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு கடந்த வார இறுதியில் (ஜனவரி 3-5) தமிழகத்தின், விழுப்புரத்தில் நடைபெற்றது.


மாநாட்டின் ஆறாவது தீர்மானம் இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களின் அவல நிலை பற்றி பேசுகிறது மேலும் அவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமென இலங்கை அரசை கோருகிறது.  


அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, “இலங்கையிலுள்ள தமிழர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் சமத்துவதுடன் வாழவும், மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும்”, என்பதாகும்.


“இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துமின்மைக்கும், நீண்ட காலமாக இன வெறி தாக்குதலுக்கும் ஆளாகி வந்த நிலையில், அது உள்நாட்டு யுத்தத்திற்கும், அமைதி இன்மைக்கும் வழி வகுத்தது. அதனால் அனைத்து பகுதி மக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர்”.


தற்போது தமது ’சக தோழரான’ அனுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ள நிலையில், சமத்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்படுத்தப்பட வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


”தற்போது இலங்கைத் தமிழர்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களின் ஆதரவு பெற்ற தேசிய மக்கள் சக்தி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது. இச்சுமூகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சமத்துவத்தையும் மாகாணங்களுக்கான அதிகார பரவலையும் உறுதி செய்ய வேண்டுமென இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது”.


மேலும் மாகாண சபைகளுக்கு விரைவாக தேர்டலை நடத்த வேண்டும் எனவும், அவற்றை விரைவாக நடத்தி அனைத்து மாகாண சபைகளுக்கும் உரிய அதிகாரங்கள் வழங்குவதன் ஊடாக, தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு முன்வர வேண்டும் எனவும் அந்த மாநாட்டின் தீர்மானம் கோரியுள்ளது.


இலங்கையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசும், அதன் தலைவரும் ஜனாதிபதியுமான அனுர குமார திஸநாயக சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெற்று, அவர்களுக்கு உரிமைகளை அளிக்கும் தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்தக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


“இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்களின் மலையகத் தமிழர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் உரிய கருத்துப் பரிமாற்றங்களை நடத்தி தீர்வுகளை உருவாக்க வேண்டும். மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கத்தின் போது எந்த வித கட்டுப்பாடுகளும் விதிக்காது, கல்வி, சுகாதாரம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், பொலிஸ் போன்ற விடயங்களிலும் மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது”.


இலங்கையிலுள்ள சிறுபான்மையினருக்கு அதிகாரப் பகிர்வு மற்றும் அவர்களுக்கான நல்வாழ்வு மற்றும் சமத்துவம் குறித்து இயற்றப்பட்ட தீர்மானத்தை மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் முன்மொழிய, தமிழக சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை வழிமொழிந்தார்.


இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான லோக் சபாவில் கட்சிக்கு நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் இந்திய நாடளுமன்ற மேலவையான ராஜ்ய சபாவில் அக்கட்சிக்கு ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் பல மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு அந்த கட்சியின் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளதோடு, கேரள மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.


மக்கள் ஜனநாயகம், தேச பக்தர்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோரின் புரட்சிகர ஒற்றுமை மூலம் சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்கு உறுதி பூண்டுள்ளதாக அந்த கட்சியின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமது கட்சியின் அடித்தளம் உழைப்பாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டணியே என அக்கட்சி தெரிவிக்கின்றது.


பணியாற்றும் உரிமை, தொழிலாளர்களை ஒன்று திரட்டி கூட்டு பேரம் பேசுதல் மற்றும் வேலை நிறுத்தம், மனித உரிமைகள் ஆகியவை அக்கட்சியின் அடிப்படை கொள்கைகள் மற்றும்  அடிப்படை விழுமியங்களாக கூறப்பட்டுள்ளன.


இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவானபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது.  


“இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு இடதுசாரி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு வரலாற்று நிகழ்வு” என அந்தக் கட்சி வாழ்த்தியது.


“சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாட்டை சமூக பொருளாதார அபிவிருத்தி, முன்னேற்றம் மற்றும் நலன்புரி பாதையில் இட்டுச் செல்வார் என நாங்கள் நம்புகிறோம். அவரது முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என அக்கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







"இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதிபடுத்துக" இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சி வலியுறுத்தல் Reviewed by Author on January 07, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.