இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் இந்திய மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் பறிமுதல்:- வீட்டின் உரிமையாளருக்கு வலை வீச்சு
தங்கச்சிமடம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் மூட்டைகளை இன்று (30) அதிகாலை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கஞ்சா, கடல் அட்டை, பீடி இலை பண்டல்கள், ஏலக்காய், சுக்கு, செருப்பு, திமிங்கலம் துடுப்பு, உள்ளிட்டவைகள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தங்கச்சிமடம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் ஏலக்காய், சுக்கு, வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (30) அதிகாலை தங்கச்சிமடம் அடுத்த அய்யன் தோப்பு கடற்கரை கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
இதன் போது அங்கிருந்த வீட்டில் இலங்கைக்கு படகில் கடத்திச் செல்வதற்காக 7 மூட்டைகளில் 175 கிலோ ஏலக்காய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஏலக்காய் மூட்டைகளை பறிமுதல் செய்து தங்கச்சிமடம் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக தலைமறைவான வீட்டின் உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஏலக்காய் இந்திய மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் எனவும் ஏலக்காய் மூட்டைகள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Reviewed by Vijithan
on
May 30, 2025
Rating:

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment