கச்சதீவு விவகாரம் - விஜய் தமிழக மீனவர்களை ஏமாற்றுகிறார்
வரலாறு தெரியாத ஒரு நடிகருக்கு, எமது பெறுமதி வாய்ந்த அமைச்சர் "கச்சதீவு எங்களுடையது, இதனை விட்டுத் தர முடியாது" என்று கூற வேண்டிய தேவையில்லை. கச்சதீவை மீட்க முயற்சிக்கும் இந்திய மத்திய அரசுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும், சீனாவிடம் பறிபோகும் தமது நிலத்தை மீட்பதற்கு துப்பு இருக்கிறதா என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.
இன்று (28) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்:
கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில், அந்தக் கட்சியின் தலைவரான அரசியல் புதுமுகம் விஜய், கச்சதீவு இந்தியாவிற்கு சொந்தம் எனக் கூறியுள்ளார்.
இந்த விடயம் கவலை அளிப்பதாக இருந்தாலும், இது காலத்திற்கு காலம் அரசியல் இலாபம் தேடுவதற்கும், தமிழ்நாட்டு மீனவ மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கும் மேற்கொள்ளப்படும் நாடகமாகும்.
விஜய், இலங்கை-இந்தியாவிடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி அறியாமல், கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தம் எனக் கூறியது, தமிழ்நாட்டு மீனவ மக்களை ஏமாற்றும் செயலாகும். பழம்பெரும் அரசியல் தலைவர்களுக்கே தெரிந்திருக்கிறது கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க முடியாது என்று.
கச்சதீவு விவகாரத்தை அரசியலாக்கி, தமிழக மீனவர்களின் வாக்குகளைப் பெறுவதே அவர்களின் நோக்கம். அதைத் தவிர இதில் வேறு எதுவும் இல்லை. இந்தியாவின் ஒரு பகுதியை சீனா தான்தோன்றித்தனமாக கைப்பற்றி வருகிறது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட மீட்கத் துப்பில்லாத இந்திய அரசாங்கமும், தமிழக வெற்றி கழகமும், இலங்கையில் உள்ள கச்சதீவு தமக்கு சொந்தம் என்றும், அதைத் திருப்பிப் பெறுவோம் என்றும் கூறுவது வேடிக்கையான விடயம். விஜய் வரலாற்றைப் படித்திருக்க வேண்டும். அவருக்கு ஒரு புத்திமதி: கச்சதீவிலிருந்து இராமேஸ்வரம் ஏறத்தாழ 30 மைல் தொலைவில் உள்ளது.
நெடுந்தீவிலிருந்து தொண்டி 30 மைல் தொலைவில் உள்ளது. கச்சதீவிலிருந்து கோதண்டராமர் கோயில் 30 மைல் தொலைவில் உள்ளது. ஆனால், தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வெறும் 18 மைல் தொலைவில் உள்ளது.
ஏன் நாங்கள் தனுஷ்கோடியை எங்கள் நாட்டின் பகுதி என்று கூறவில்லை? தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் எங்களுக்கும் இடையே நீண்ட காலமாக சட்டவிரோத இழுவைமடி மீன்பிடித்தொழில் ஒரு பிரச்சினையாக உள்ளது. அதற்கு கச்சதீவு தீர்வாக முடியாது. இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க வேண்டுமானால், சட்டவிரோத இழுவைமடி மீன்பிடித்தொழிலை நிறுத்த வேண்டும்.
முடிந்தால், விஜய் மத்திய அரசுடன் பேசி, அவர்கள் மூலம் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வந்து, எங்கள் நாட்டின் ஒரு பகுதியான கச்சதீவைத் தருமாறு கேட்கலாம். ஆனால், அதை மீட்க முடியாது. அரசியல் நோக்கங்களுக்காக விஜய் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கச்சதீவு விவகாரம் - விஜய் தமிழக மீனவர்களை ஏமாற்றுகிறார்
Reviewed by Vijithan
on
August 28, 2025
Rating:

No comments:
Post a Comment