மன்னாரில் 20 வது நாளாக தொடரும் போராட்டம்-ஜும்ஆ தொழுகையின் பின்னர் கலந்து கொண்டு ஆதரவு வழங்கிய முஸ்லிம் வர்த்தகர்கள்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (22) 20 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஒன்று திறண்டு ஆதரவை வழங்கியுள்ளனர்.
-இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (22) மதியம் இடம் பெற்ற ஜும்ஆ தொழுகையின் பின்னர் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் வருகை தந்து கலந்து கொண்டு தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 20 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த போராட்டமானது காலத்தின் தேவை கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்,குறித்த போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து கொண்டு தாம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும்,தொடர்ந்தும் தமது ஆதரவு இப்போராட்ட குழுவிற்கு கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
-மன்னார் மக்கள் இன மத வேற்றுமை இன்றி ஒற்றுமையாக போராடும் பட்சத்தில் எமது இலக்கை அடைய முடியும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மன்னார் பஜார் பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment