அண்மைய செய்திகள்

recent
-

குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வாய்வுக்கு 2.8 மில்லியன் மதிப்பீடு!

 கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மனித புதைகுழியென நம்பப்படும்  பிரதேசத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதி மதிப்பீட்டை கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.


நீதிமன்றம் 2.8 மில்லியன் ரூபாய் கோரிக்கையை நிதி அமைச்சு மற்றும் நீதி அமைச்சிற்கு அனுப்புவதற்கு உத்தரவிட்டுள்ளது.


முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் 150ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மனிதப் புதைகுழியை அகழ்வாய்வு செய்ய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது.


குறித்த படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இந்த படுகொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் (செப்டெம்பர் 23) களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அகழ்வாய்வுப் பணிகளுக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி மதிப்பீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதை மேல் நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அனுப்ப உத்தரவிட்டதாக வழக்கு விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சடடத்தரணி முசாம் முபாரக் தெரிவித்தார்.  


"இன்று கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரியினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு குறித்து இன்று அவதானம் செலுத்தப்பட்டது. இதற்கமைய 2.85 மில்லியன் ரூபாய் பாதீட்டின் பட்ஜட் பிரேக்டவுன் (budget breakdown) இன்று நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், இந்த பாதீட்டு நிதியினை பெற்றுக்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் ஊடாக நிதி அமைச்சுக்கும், நீதி அமைச்சுக்கும் அனுப்புமாறு கட்டளையிடப்பட்டுள்ளது."


இந்த வழக்கு ஒக்டோபர் 9, 2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.


மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு களுவாஞ்சிகுடி நீதவான்ஸப்னா ஸிராஜ்   ஓகஸ்ட் 25, 2025 அன்று அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


எலும்புக்கூடுகள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படாமல், அகழ்வாய்வினை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள, இலங்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் முதலாவது மனித புதைகுழி இதுவாகும்.


2014 சுற்றுலா நீதிமன்றம்


1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து காத்தான்குடிக்குத் திரும்பிய முஸ்லிம்கள் குழு ஒன்று படுகொலை செய்து புதைத்ததாக உள்ளூர்வாசி அப்துல் மஜீத் அப்துல் ரவூப் களுவாஞ்சிக்குடி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும், இந்த வழக்கு ஜூலை 1, 2014 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, படுகொலை செய்து புதைக்கப்பட்டமைக்கான நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் அகழ்வினை மேற்கொள்வதற்குத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிபதி ஏ.எம். ரியால் உத்தரவிட்டார், எனினும் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.


11 வருடங்களின் பின்னர் களுவாஞ்சிக்குடி, நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூஃப் தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஜூலை 11, 2025 அன்று இந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.




குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வாய்வுக்கு 2.8 மில்லியன் மதிப்பீடு! Reviewed by Vijithan on September 23, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.