அண்மைய செய்திகள்

recent
-

பலத்த பாதுகாப்புடன் நியூயோர்க் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் மதுரோ!

 நியூயோர்க் நகரின் புரூக்ளினில் உள்ள மெட்ரோபாலிட்டன் தடுப்புக்காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, இன்று (05) நியூயோர்க் நகரின் மன்ஹட்டனில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 


மதுரோ தடுத்து வைக்கப்பட்டுள்ள மெட்ரோபாலிட்டன் தடுப்புக்காவல் நிலையத்திற்கு முன்பாக, வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது. 

மதுரோ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில், முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்களான சினலோவா (Sinaloa) மற்றும் ட்ரென் - டி - அரகுவா (Tren de Aragua) ஆகியவற்றிற்கு ஆதரவளித்தமை உள்ளடக்கப்பட்டுள்ளது. 

அவர் அமெரிக்காவிற்கு கொக்கைன் போதைப்பொருளை அனுப்புவதற்கு வழிகாட்டியாகச் செயற்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தலைப் பாதுகாப்பாக மேற்கொள்வதற்காக வெனிசுலா இராணுவத்தைக் கூட பயன்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. 

மதுரோவிற்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முதன்முதலில் 2020 ஆம் ஆண்டிலேயே பதிவு செய்திருந்தது. 

தற்போது அவரையும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸையும் (Cilia Flores) உள்ளடக்கி இற்றைப்படுத்தப்பட்ட புதிய குற்றப்பத்திரிகை ஒன்றை ஜனாதிபதி டிரம்ப்பின் நீதித் திணைக்களம் தயாரித்துள்ளது. 

வெனிசுலாவிற்குள் மாற்றுக் கருத்துடையோரை கடத்தல் மற்றும் படுகொலை செய்தமை தொடர்பில் மதுரோவின் மனைவி மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

மதுரோவின் ஆட்சி வெனிசுலாவின் சட்டரீதியான அரசாங்கம் என்பதை அமெரிக்கா 2024 ஆம் ஆண்டிலிருந்தே அங்கீகரிக்கவில்லை. 

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு உதவியதாக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து நிராகரித்து வந்தார். 

எவ்வாறாயினும், வெனிசுலாவிற்குள் புகுந்து மதுரோவைக் கடத்தி அமெரிக்காவிற்குக் கொண்டுவரும் நடவடிக்கை மிகவும் சிக்கலான, அதேநேரம் நம்பமுடியாத ஒரு நடவடிக்கை என்றே கூற வேண்டும். 

'ஒப்பரேஷன் அப்சல்யூட் ரிசோல்வ்' (Operation Absolute Resolve) அல்லது 'முழுமையான தீர்வு' எனப் பெயரிடப்பட்ட அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

கடந்த சனிக்கிழமை அமெரிக்க நேரப்படி 4.21 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டு, மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட செய்தியை உலகுக்கு வெளிப்படுத்தினார். 

இது ஆச்சரியப்படத்தக்க ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், இதற்காக அமெரிக்கா பல மாதங்களாகத் தயாராகி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அமெரிக்க இராணுவத்தின் பிரதான பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவான 'டெல்டா ஃபோர்ஸ்' (Delta Force), ஒத்திகைக்காக மதுரோவின் பாதுகாப்பு இல்லத்தின் மாதிரி ஒன்றையும் உருவாக்கியிருந்தது. 

இதற்கிடையில், சிஐஏ (CIA) அமைப்பின் சிறிய குழுக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே மதுரோவின் நடவடிக்கைகளையும் அவர் சென்று வரும் இடங்களையும் கண்காணித்து வந்துள்ளன. 

அத்துடன், அவரது பயணங்கள் குறித்து அந்தந்தத் தருணத்திலேயே அறிந்துகொள்ளக்கூடிய உளவாளிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

இந்த நடவடிக்கை தொடர்பில் டிரம்ப் நிர்வாகத்தின் நெருக்கமானவர்கள் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். 

இராஜாங்கச் செயலாளர் ரூபியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர். 

இறுதியில், இந்த நடவடிக்கைக்காக 04 நாட்களுக்கு முன்னரே ஜனாதிபதி டிரம்ப் அனுமதியளித்திருந்த போதிலும், நடவடிக்கைக்கு சாதகமான மேகமூட்டம் குறைந்த வானிலை நிலவும் வரை பாதுகாப்புப் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை வரை காத்திருந்துள்ளனர். 

வெள்ளிக்கிழமை இரவு 10.46 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப்பின் இறுதி உத்தரவுடன் செயற்பட்ட அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டபோது, ஜனாதிபதி டிரம்ப் 'மார் - அ - லாகோ' (Mar-a-Lago) உல்லாச விடுதியிலிருந்து தனது நெருக்கமானவர்களுடன் அதனை நேரலையாகப் பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அக்காலப்பகுதியில் வெனிசுலாவிற்கு அப்பால் கரீபியன் கடலில் குவிக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கடற்படை பலம் இந்த நடவடிக்கைக்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் விமானம் தாங்கிக் கப்பல் உட்பட 11 போர்க்கப்பல்கள், எஃப் - 35 (F-35) போர் விமானங்கள் மற்றும் 15,000 க்கும் மேற்பட்ட துருப்புக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. 

எவ்வாறாயினும், 20 இடங்களிலிருந்து புறப்பட்ட 150 க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்த நடவடிக்கையில் இணைந்ததாக டிரம்ப் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. 

இதில் எஃப் - 35, எஃப் - 22 போர் விமானங்கள் மற்றும் பி - 1 (B-1) குண்டுவீச்சு விமானங்களும் அடங்கும். 

கராகஸ் நகரம் மற்றும் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள வெனிசுலா இராணுவத் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட அதேவேளை, அமெரிக்க இராணுவத்தின் டெல்டா படைப்பிரிவு மதுரோவைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டது. 

சனிக்கிழமை சுமார் 10.00 மணியளவில் கராகஸ் நகரில் உள்ள மதுரோவின் பலத்த பாதுகாப்புமிக்க இல்லத்தில் ஹெலிகொப்டர் மூலம் தரையிறங்கிய டெல்டா படையினர், அதன் இரும்புத் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். 

மதுரோ தனது மாளிகையில் உள்ள பாதுகாப்பு அறைக்குள் நுழைய முயன்ற போதிலும், அதன் கதவை மூட முடியாத காரணத்தினால் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்ததாகத் தெரியவந்துள்ளது. 

மதுரோ மற்றும் அவரது மனைவி ஹெலிகொப்டர் மூலம் அமெரிக்கப் போர்க்கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நியூயோர்க்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.




பலத்த பாதுகாப்புடன் நியூயோர்க் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் மதுரோ! Reviewed by Vijithan on January 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.