குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரண்டாவது சந்தேகநபரான இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவரது வீட்டிலிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் இரத்தினக்கற்கள் உள்ளிட்ட சொத்துக்களை, அவரது சகோதரரான இஃப்லால் அஹமட்டிடம் ஒரு வாரத்திற்குள் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (25) உத்தரவிட்டார்.
முன்னைய நீதவான் இந்தச் சொத்துக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய சி.ஐ.டி-க்கு போதுமான அவகாசம் வழங்கியிருந்தும், அவர்கள் அதனைச் செய்யத் தவறியுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.
இந்த உத்தரவை ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தாவிடில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் எச்சரித்தார்.
ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் மற்றும் தெமட்டகொட வீட்டில் குண்டு வெடித்ததில் உயிரிழந்த இன்ஷாப் அஹமட் ஆகியோரின் சகோதரரான இஃப்லால் அஹமட், குறித்த சொத்துக்கள் தனக்குச் சொந்தமானவை எனக் கூறி அவற்றை விடுவிக்குமாறு சட்டத்தரணி ஊடாகக் கோரியிருந்தார்.
தற்போது அந்தப் பொருட்கள் மத்திய வங்கியின் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அவற்றை விடுவிக்க மேலதிக அவகாசம் கோரியதுடன், இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடுவது தவறான செயலாகும் என நீதவான் வலியுறுத்தினார்.
நீதிமன்ற உத்தரவுகளை அமுல்படுத்தத் தவறுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றமாகும் எனத் தெரிவித்த அவர், எக்காரணம் கொண்டும் ஒரு வாரத்திற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், ஏ.எச்.எம். ரிஃபாஸ் மற்றும் மொஹமட் நிலாம் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு
Reviewed by Vijithan
on
February 25, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 25, 2026
Rating:


No comments:
Post a Comment