ஈழத்தின் கிளிநொச்சி அக்கராயனில் நடந்தேறிய 'ஏர் நிலம்' உழைப்பாளர் மதிப்பளிப்பும் பொங்கல் விழாவும்
'எனது எழுபத்தெட்டாவது வயதில் கிடைத்த இந்த மதிப்பளிப்பு எனக்குள் உழைப்பின் காலத்து நினைவினை விதைத்தது' என்று சொன்னார் மதிப்பளிப்பினை பெற்றுக் கொண்ட மூத்த விவசாயி ஒருவர்
'ஏர் நிலம்' தொண்டமைப்பின் ஊடாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்ற மூத்த உழைப்பாளர்கள் மதிப்பளிப்பும் பொங்கல் விழாவும் நிகழ்வானது 2026 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் கந்தபுரத்தில்அமைந்துள்ள இலக்கம் 01 அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. 'ஏர் நிலம்' தொண்டமைப்பும், அக்கராயன் பிரதேச பொது அமைப்புகளும் இணைந்து இந்த நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தன. ஏற்கனவே முறிகண்டி தருமபுரம், மாங்குளம், கற்சிலைமடு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்நிகழ்வு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்விற்கு 'ஏர் நிலம்' தொண்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட செயலாற்றுநர் கவிஞர் யே.லக்சிதரன் தலைமை வகித்தார். பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதி விவசாயப்ர பணிப்பாளர் சோதிலக்சுமி விஜயதாசன் பங்கேற்றார். தொடக்க நிகழ்வாக கோணாவில் மகா வித்தியாலய மாணவர்களின் தமிழ் இன்னிய அணிவகுப்பு, பிரதேச முன்பள்ளிச் சிறார்களின் தமிழறிஞர் வேடம் புனைவு உள்ளிட்ட பண்பாட்டு அடையாளங்களோடு விருந்தினர்களும் மூத்த உழைப்பாளர்களும் வரவேற்கப்பட்டனர். தமிழர்களின் பண்டைய போக்குவரத்துச் சாதனமான மாட்டு வண்டில் பவனியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. உழவர்கள் மகிழ்வோடு பொங்கலிட்டனர்.
நிகழ்ச்சிகளை ந.சுதர்சினி, பூ.அகிலன் ஆகியோர் தொகுத்தளித்தனர்.
மங்கல ஒளியேற்றல், அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து அக்கராயன் மகா வித்தியாலய மாணவர்கள் வரவேற்பு நடனம் நிகழ்த்தினர்.
வரவேற்புரையினை 'ஏர் நிலம்' செயலாற்றுநர் வதனா ரதீஸ்வரன் நிகழ்த்தினார். ஆசியுரையினை அருட்தந்தை பெ. அல்பர்ட் அடிகளார் நிகழ்த்தினார். தலைமை உரையினை நிகழ்த்திய 'ஏ ர்நிலம்' தொண்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட செயலாற்றுநர் கவிஞர் யே.லக்சிதரன் அவர்கள் தனதுரையில், மூத்த உழைப்பாளர்களை மதிப்பளிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்ற அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார். குறித்த உழைப்பாளர்களின் வீடுகளுக்கு சென்ற பொழுது அவர்கள் ஒவ்வொருவரும் முதிர்ந்த வயதிலும் குடிசைக் கைத்தொழில் ஒன்றில் ஈடுபட்டதையும் வீட்டுத்தோட்டம் உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து 'ஏர் நிலம்' அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய விளக்க உரையினை 'ஏர் நிலம்' தொண்டமைப்பின் முதன்மை ஆலோசகர் ஓய்வுநிலை அதிபர் சூரியகுமாரி இராசேந்திரன் நிகழ்த்தினார். பொ அமைப்புகள் சார்ந்த உரையினை கந்தபுரத்தினைச் சேர்ந்த குமாரசுவாமி விமலேஸ்வரன் நிகழ்த்தினார். அக்கராயன் பிரதேசமும் கந்தபுரம் மண்ணும் இடப்பெயர்வு காலத்தில் இலட்சக்கணக்கான மக்களுக்கு இடம் கொடுத்து ஆதரித்த மண். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இலட்சக்கணக்கான மக்கள் இந்தப் பகுதியில் குடியேறி வாழ்ந்து இருந்தனர். அவர்களில் அநேகர் நிரந்தரமாக இங்கேயே குடியேறி விட்டனர் என்று அவர் குறிப்பிட்டார். கந்தபுரம் இலக்கம் ஒன்று பாடசாலை மாணவர்கள் நிகழ்த்திய நடனக்காட்சி மனதுக்கு மகிழ்ச்சியானது. சிறப்புரை நிகழ்த்திய யோ.புரட்சி உலகம் இன்று செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கத்துக்குள் இருந்தாலும் செயற்கை நுண்ணறிவினால் வயற்காட்சிகளை உண்டாக்க முடியும் வயலினை உண்டாக்க முடியாது, அதனை ஊழைப்பாளர்கள் உங்களால் மாத்திரமே உண்டாக்க முடியும் என்றார்.
நிகழ்வில் அக்கராயன்குளம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மரிய தேவதாஸ் விஜிதரன் அவர்கள் உழைப்பாளர்களுக்கான வாழ்த்துரையில் அக்கராயன் பிரதேசம் உள்ளூர் உற்பத்திகளுக்கு உகந்த பிரதேசமாக அமைந்திருப்பதை சுட்டிக் காட்டினார்.
அக்கராயன் மகா வித்தியாலயம் மாணவர்களின் கும்மி நடனம் அரங்கில் கலையை மிளிரச் செய்தது. ஸ்ரீ மீனாட்சி நர்த்தனாலய மாணவர்களின் நடனம் பார்வைக்கு கலை விருந்தாம்.
கண்டவளை கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி இரவீந்திரநாதன் அவர்கள் மூத்த உழைப்பாளர்களுக்கு வாழ்த்துச் சொல்லியதோடு 'ஏர் நிலம்' பணிகளையும் பாராட்டினார். பிரதேச கலைஞர்கள் சார்பாக சி சின்னராசு, ஆ வேலு ஆகியோர் இணைந்து அண்ணாவியார் பாடலினை வழங்கினர். மிருதங்க இசையும் ஹார்மோனியமும் இணைந்த விவசாயப் பாடல்களை மீட்டினர். கரைச்சி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் யூ.ராஜ் வினோத் அவர்கள் வாழ்த்துரை வழங்கும்புது விவசாயிகளுக்கான பாடலினையும் இசைத்தார். 'ஏர் நிலம்' தொண்டமைப்பினை நிறுவி வழிநடத்திக் கொண்டிருக்கும் து.திலக் அவர்களின் பணி இலங்கையின் வடக்கு கிழக்கு மாத்திரமல்ல மலையகப் பகுதி வரை வியாபித்திருப்பதையும் நேர்த்தியான வழிநடத்தலை அவர் செய்வதையும் அவர் பாராட்டி இருந்தார்.
தொடர்ந்து மூத்த உழைப்பாளர்கள் மதிப்பளிப்பு செய்யப்பட்டனர். 25 மூத்த உழைப்பாளர்கள் குடும்பத்தினரோடு இணைத்து மதிப்பளிக்கப்பட்டனர். உழைப்பாளர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பதக்கம் சூட்டப்பட்டு, பொன்னாடை போர்த்தப்பட்டு பணப்பரிசில் நினைவுச்சின்னம் ஆகியவை வழங்கப்பட்டன. ஏற்கனவே நிகழ்விற்கான புத்தாடை அனைத்து உழைப்பாளர்களுக்கும் 'ஏர் நிலம்' ஊடாக கொடுக்கப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் பிரதம விருந்தினர் வடக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் சோதிலக்சுமி விஜயதாஸ் அவர்கள் தனதுரையில், இத்தகைய நிகழ்வுகள் உழைப்பாளர்களின் மன மகிழ்ச்சிக்கு எவ்விதம் துணை செய்கின்றன என்பதையும், உழைத்தோரை மறவாத மண் எமது மண் என்றும் குறிப்பிட்டார்.
நன்றியுரையினை ஏர்நிலம் தொண்டமைப்பின் தாயக இணைப்பாளர் பிரான்சிஸ் பெனில் அவர்கள் நிகழ்த்தினார். இந்த நிகழ்விற்கு நிதி அனுசரணையினை கனடா வாழ் தமிழுறவு ஆறுமுகம் மோகன், யேர்மனி வாழ் தமிழுறவு செல்லன் தயாபரன், சுவிட்சர்லாந்து வாழ் தமிழுறவுகளான நமச்சிவாயம் இராமச்சந்திரன், துரைராசா லிங்கேஸ்வரன் ஆகியோர் வழங்கி இருந்தனர்.? நிகழ்வில் நிதி அனுசரணை வழங்கிய ஒவ்வொருவருக்கும் உரையாற்றுநர்கள் தமது வாழ்த்தினையும் நன்றியினையும் பகிர்ந்திருந்தனர்.
நிகழ்ச்சிகளை அளித்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, அனைவருக்குமான மதிய உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்வானது உரிய நேரத்தில் தொடங்கப்பட்டு, உழைப்பாளர்களின் நற்சேவையை உள்ளத்தில் வைத்து நன்றியுரைத்த நல்நிகழ்வாய் நடந்தேறியது.
Reviewed by Vijithan
on
February 17, 2026
Rating:










.jpg)
















.jpg)









No comments:
Post a Comment