அஸ்வெசும வழங்கப்படும் நாட்டில் மலையகத்தில் மதுபான விற்பனை அதிகரிப்பு
அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டம், மதுபான சாலைகளின் வருமானத்தை அதிகரித்துள்ளதாக மலையகப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரண நாட்களை விடவும், அரசாங்கம் ‘அஸ்வெசும’ தவணைக் கொடுப்பனவுகளை வழங்கும் நாட்களில் மதுபான சாலைகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்து வருவதாக மதுபானக் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக மலையகத்தின் தோட்டப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மதுபான சாலைகளில் இந்தப் போக்கு அதிகளவில் காணப்படுவதாகவும் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அஸ்வெசும பணத்தைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளில் கணிசமானோர், தங்களது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகள் அல்லது பொறுப்புகளைப் பற்றிச் சிந்திக்காமல், அப்பணத்தை நேரடியாக மதுபானங்களுக்காகச் செலவிடுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுபானக் கடை உரிமையாளர்கள் சிலர்,
“அஸ்வெசும பணம் வழங்கப்படும் நாட்களில் எமது கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.
வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பணம் எங்கிருந்து வருகிறது என்பது எமது வியாபாரத்திற்கு முக்கியமல்ல. அவர்கள் எமது வாடிக்கையாளர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக எம்மால் முறைப்பாடு செய்யவும் முடியாது” எனத் தெரிவித்துள்ளனர்.
வறிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் வழங்கும் நிதி, இவ்வாறு மதுபான சாலைகளுக்குச் செல்வது குறித்த சமூக மட்டத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது அஸ்வெசும திட்டத்தின் உண்மையான நோக்கத்தைச் சிதைப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Reviewed by Vijithan
on
February 25, 2026
Rating:


No comments:
Post a Comment