மன்னாரில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை!
மன்னார் நகர் பகுதியில் பொது மக்களின் சுகாதாரத்தை பாதிக்கும் வகையில், சுகாதாரச் சீர்கேடுகள் உடன் இயங்கி வந்த மூன்று பிரபல உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அதிரடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு தொடர்ச்சியாக கிடைக்கபெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து, மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய, குறித்த உணவகங்களில் திடீர் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் போது, குறித்த உணவகங்கள் கடுமையான சுகாதாரச் சீர்கேடுகள் உடன் இயங்கி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக உணவுகள் தயாரிக்கப்படும் இடங்கள் மிகுந்த அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் வகையில் காணப்பட்டன. உணவகம் முழுவதும் ஈக்கள் அதிக அளவில் மொய்த்துக் கொண்டிருந்ததுடன், கழிவுநீர் வெளியேற முறையான வசதிகள் இன்றி காணப்பட்டுள்ளது.
மேலும் சேகரிக்கப்படும் குப்பைகளை உரிய முறையில் அகற்றப் படாமல் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தமை உட்பட குறித்த உணவகங்களுக்கு உரிய சுகாதாரச் சான்றிதழ்கள் பெறப்படவில்லை
அதே நேரம் உணவு தயாரிக்கும் பணியாளர்கள் எவ்வித மருத்துவச் சான்றிதழும் இன்றி பணியில் ஈடு பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
அத்துடன் முகக்கவசம் மற்றும் கையுறை அணியாமல் சுகாதாரமற்ற முறையில் பணியாளர்கள் உணவுகளைக் கையாண்டுள்ளது டன் கழிவறைகளுக்கு அருகிலேயே உணவு தயாரிக்கும் சூழல் காணப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான சுகாதார மீறல்கள் காரணமாக, குறித்த மூன்று உணவகங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது டன், எதிர்காலத்தில் எவ்வாறு சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறாத வாறு கடுமையான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான முறையற்ற செயல்களில் ஈடுபடும் உணவகங்கள் மீது தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளதுடன் சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்கள் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையில் முறைப்பாடுகள் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
Reviewed by Vijithan
on
June 08, 2026
Rating:


No comments:
Post a Comment