அண்மைய செய்திகள்

recent
-

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

 அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் இன்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

உற்பத்தியிலேயே ஆசனப்பட்டிகள் பொருத்தப்படாத பழைய வாகனங்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் நான்கு சந்தர்ப்பங்களில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் சலுகைக் காலம் வழங்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

அச்சலுகைக் காலம் இன்றோடு நிறைவடைவதால், ஆசனப்பட்டிகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு மட்டுமே இன்று நள்ளிரவுக்குப் பிறகு அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார். 

அதேநேரம் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப் பட்டிகளை அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் நாளை (19) முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதற்காக வழங்கப்பட்டிருந்த சுமார் ஒரு வருட கால சலுகைக் காலம் இன்றுடன் முடிவடைவதால், நாளை முதல் ஆசனப் பட்டி அணியாமல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார். 

இதற்கமைய, ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்கள் நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார். 

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும் என பொலிஸார் வலியுறுத்துகின்றனர். 

ஆசனப் பட்டிகளை அணியாததால் வீதி விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, இதன்காரணமாகவே இச்சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். 

அபராதம் விதிப்பதையோ அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதையோ மட்டுமே நோக்கமாகக் கொண்டு இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 

குறிப்பாக வாகனத்தின் பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும் என்றும், ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்களில் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முயற்சிக்க வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.




அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்! Reviewed by Vijithan on September 18, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.