அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேறக்கோரி முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதிப்பு-படம்


இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை பயிற்சி முகாமாக மாறியுள்ள தமது கிராமத்தை மீட்டு குறித்த கிராமத்தில் தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் இன்று வியாழக்கிழமை (23) காலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் முள்ளிக்குளம் பிரதான வீதியில் உள்ள முள்ளிக்களம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக குறித்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்,ஆண்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக கடந்த 2007 ஆம் ஆண்டு கடற்படையினரால் முள்ளிக்குளம் கிராம மக்களாகிய தாம் பல வந்தமாக வெளியேற்றப்பட்டு இன்று 10 வருடங்களை கடந்த நிலையில் பல்வேறு இடங்களிலும் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் தாம் வாழ்ந்து வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 பத்து வருடங்களை எட்டியுள்ள நிலையில், இன்று வரை தமது கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எந்த வித பதிலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 245 குடும்பங்கள்,மலங்காடு,காயாக்குளி ஆகிய கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு துன்ப துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் பல குடும்பங்கள் மன்னாரில் உள்ள உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வருவதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்தும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும்,நல்லாட்சி அரசின் ஜனாதிபதிக்கு பல தடவைகள் மகஜரை அனுப்பி வைத்தும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலே எமது பூர்வீக காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி மக்களை மீள் குடியேற்றக் கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் நுழைவாயிலுக்கு முன்னால் ஒன்று கூடி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன் னெடுத்த போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கு கடற்படையினரும்,பொலிஸாரும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் மக்கள் அவ்விடத்தில் இருந்து செல்லவில்லை.

இந்த நிலையில் முசலி பிரதேசச் செயலக உதவிப்பிரதேசச் செயலாளர் விக்கிரமசிங்க சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் உரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும், உடனடியாக போராட்டத்தை கைவிட்டுச் செல்லுமாறும் கோரிக்கை விடுத்தார்.

எனினும் தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும், தொடர்ச்சியாக தமது போராட்டம் முன்னெடுக்கப்பட்டு உண்ணாவிரத போராட்டமாக மாறும் என அந்த மக்கள் தெரிவித்தனர்.
 மேலும் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் மக்கள் முசலி பிரதேசச் செயலக உதவி பிரதேசச் செயலாளரிடம் கையளித்தனர்.

தற்போது கடற்படையினர் நிலை கொண்டுள்ள முள்ளிக்குளிக்குளம் கிராம மக்களின் காணியில் பல நூற்றுக்கணக்கான விவசாய காணிகள், குடியிறுப்காணிகள், 7 குளங்கள், பாடசாலை, ஆலயம், அடக்கஸ்தளம்(சேமக்காலை),மற்றும் கரைவலை பாடுகள் 2 போன்றவை காணப்படுவதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.

எனவே தமது காணிகளை விட்டு கடற்படையினர் வெளியேறும் வரை தமது போராட்டம் தொடரும் என அந்த மக்கள் தெரிவித்தனர்.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















மன்னார் முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேறக்கோரி முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதிப்பு-படம் Reviewed by NEWMANNAR on March 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.