அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சின்னக்கருஸல் கிராமத்தில் நேற்றுமுன்தினம்  புதன்கிழமை  இரவு இரு குழுக்களுக்கு இடையில் பாரிய மோதல் இடம்பெற்றதாகவும்  இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட  நடவடிக்கையின் மூலம் இம்மோதல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் மன்னார் பிரதேச சபையின் உபதலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 


சின்னக்கருஸல் கிராமத்திற்கு நேற்றுமுன்தினம்  புதன்கிழமை  இரவு 7 மணியளவில் பெரியகருஸல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்று  முச்சக்கரவண்டியில் சின்னக்கருஸல் கிராமத்திற்குள் வந்துள்ளனர். இக்குழு சின்னக்கருஸல் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்பாக முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு அவ்விடத்தில் நின்று கத்தி சத்தம் போட்டும் வீட்டின் மீது கல் வீசித் தாக்கிவிட்டும் முச்சக்கரவண்டியில் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில்  குறித்த வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் தனது முச்சக்கரவண்டி மூலம் குறித்த குழுவை துரத்திக்கொண்டு பெரியகருஸல் கிராமம் வரை சென்றுள்ளார். எனினும் பெரியகருஸல் கிராமத்தில் நின்ற இக்குழுவினர் குறித்த இளைஞன் மீது தாக்கிய நிலையில் குறித்த இளைஞன் தனது முச்சக்கரவண்டியை அவ்விடத்திலேயே விட்டு தப்பிவந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

பின்னர் இக்குழுவினர் பெரியகருஸலில் விட்டுச்செல்லப்பட்ட முச்சக்கரவண்டியை தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன், சுமார் 30 பேர் கொண்ட குழு ஒன்று பெரியகருஸலில் இருந்து சின்னக்கருஸல் கிராமம்  நோக்கி மீண்டும் சென்றுள்ளது. 

இதன்போது சின்னக்கருஸலில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் குறித்த கிராமத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இக்குழுவினை இராணுவத்தினரும் பொலிஸாரும் இடை மறித்து திருப்பி அனுப்ப முயற்சித்தபோது அவர்களுக்கும் குழுவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.  பின்னர் படைத்தரப்பினர்  மீது  குறித்த குழுவினர் கல்வீசி தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவத்தை கேள்விப்பட்ட தோட்டவெளி பங்குத்தந்தை சின்னக்கருஸல் கிராமத்திற்கு வந்தபோது, பெரியகருஸல் கிராமத்தில் இருந்து வந்த இக்குழுவினர் பங்குத்தந்தை மீது தாக்கியதுடன்,  அவருடைய மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

பொலிஸாரும் இராணுவத்தினரும் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் எனவும் குறிப்பிடப்படுகிறது. 

நூற்றுக்கணக்காண இராணுவத்தினரும் பொலிஸாரும் தற்போது சின்னக்கருஸல் கிராமத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னாரில் இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது Reviewed by Admin on March 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.