மன்னாரில் 7 ஆம் திகதி சாத்வீகப் போராட்டம் : அனைவரையும் அணி திரளுமாறு செல்வம் எம்.பி அழைப்பு
மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பாஸ் நடைமுறை மற்றும் படைத்தரப்பினராலும் அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு போன்றவற்றிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி மன்னார் நகரில் நடாத்தவிருக்கும் மாபெரும் சாத்வீகப்போராட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒருமித்து குரல் கொடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
'யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளை கடந்துள்ள போதும் மன்னார் மாவட்ட மீனவர்கள் சுதந்திரமான முறையில் கடல் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு கடற்படையினரினால் மீன்பிடி தொழிலுக்காண பாஸ் நடைமுறையில் உள்ளது.
இதனால் மீனவர்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு தொடர்ந்தும் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மன்னார் மாவட்டத்தில் அரச தரப்பு மற்றும் படைத்தரப்பினரால் தமிழ் மக்களின் குடியேற்ற காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் மக்கள் மீள் குடியேற முடியாத நிலையில் உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் படைத்தரப்பினாலும் அரச தரப்பினாலும் பலவந்தமாக அபகரிக்கப்படுகின்றது.
தமது சொந்த நிலம் பறிபோனமையினால் இடம்பெயர்ந்த மக்கள் காடுகளில் தஞ்சமடைந்துள்ள அவலநிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே குறித்த பிரச்சினைகளை சர்வதேசம் அறிந்து கொள்ளும் முகமாகவும் உரிய தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை மன்னாரில் மாபெரும் சாத்வீகப்போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
இந்த போராட்டத்தில் தமிழ் பேசுகின்ற அனைவரும் கலந்து கொண்டு எமது உரிமையை வென்றெடுக்க அணிதிரலுமாறு தான் அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன்' என்றார்.
மன்னாரில் 7 ஆம் திகதி சாத்வீகப் போராட்டம் : அனைவரையும் அணி திரளுமாறு செல்வம் எம்.பி அழைப்பு
Reviewed by Admin
on
July 06, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment