அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்.{படங்கள் }

மன்னார் சௌத்பார் பிரதான வீதியில் அமைந்துள்ள இரண்டு மதுபான சாலைகளையும்,கள்ளு விற்பனை நிலையத்தையும் உடன் அகற்றக்கோரி மன்னார் பனங்கட்டுக்கோட்டு மீனவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று புதன் கிழமை காலை இடம் பெற்றது.


 மன்னார் பனங்கட்டுக்கோட்டு மீனவர் சங்கம் சுமார் 7 கிராம மக்களை உள்ளடக்கி இன்று புதன்கிழமை எதிர்ப்பு போராட்டத்தினை நடாத்தினர். இன்று காலை 9 மணியளவில் மன்னார் பனங்கட்டிக்கோட்டு பிரதான வீதியில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு குறித்த மதுபானச்சாலைகளை அகற்றக்கோரி கோசங்களை எழுப்பியவாறு சௌத்பார் பிரதான வீதியூடாக சென்றனர்.

 இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் ஏ.விக்டர் சூசை,பௌத்த மத குரு,அருட்தந்தையர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர். பேரணியாக சென்ற மக்கள் ஏற்கனவே உள்ள மதுபானச்சாலை மற்றும் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய மதுபானச்சாலை ஆகியவற்றிற்கு முன் அமர்ந்திருந்து குறித்த மதுபானச்சாலைகளை குறித்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.

 கடும் மழை பெய்த நிலையில் அவற்றை பொருட்படுத்தாது அந்த மக்கள் தொடர்ந்தும் அவ்விடத்தில் அமர்ந்திருந்தவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நீண்ட நேரமாகிய நிலையில் அரச அதிகாரிகள் எவரும் அந்த இடத்திற்கு சமூகமளிக்கவில்லை. இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் மற்றும் நகர சபை உறுப்பினர்களான இரட்ணசிங்கம் குமரேஸ்,டிலான்,மெரினஸ் ஆகியோர் வந்து குறித்த மக்களுடன் உரையாடினர்.

இதே நேரம் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் எ.சகாயம்,டெலோ இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் பற்றிக் வினோ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி மன்னார் சௌத்பார் பிரதான வீதியில் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு புதிய மதுபானசாலை திறக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதனை மூடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள பொலிஸாருக்கு மன்னார் நகர சபை கடிதம் ஒன்றை உடன் அனுப்பி வைத்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட குறித்த மதுபானச்சாலை சகல தரப்பினருடைய அனுமதிகளை பெற்றுள்ள போதும் மன்னார் நகர சபையிடம் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார். இதே சமயம் இந்த மக்களின் விருப்பத்திற்கு அமைவாக மட்டுமே மன்னார் நகர சபை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

 இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் உரையாற்றினார்   இதன் போது இக்கிராம மக்கள் குறித்த மதுபானச்சாலைகளினால் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இப்பகுதியில் உள்ள சிறுவர்களின் நிலை,எதிர்காலம் ஆகியவற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவித்தார்.

 இந்த நிலையில் மன்னார் சௌத்பார் பிரதான வீதியில் அமைந்துள்ள மது வரித்திணைக்களத்திற்குச் சென்று இது தொடர்பில் கதைப்பதற்கு முடிவு செய்தனர். இந்த நிலையில் மன்னார் ஆயர் உற்பட பல நூற்றுக்கணக்கான மக்கள் கொட்டும் மழையில் கோசங்களை எழுப்பியவாறு அங்கு சென்றனர்.












 பின் மது வரித்திணைக்களத்தில் உள்ள அதிகாரிகளுடன் மன்னார் ஆயர்,மன்னார் நகர சபை தலைவர்,உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இந்த நிலையில் மதுவரித்திணைக்களத்தின் உயர் மட்ட அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திய நிலையில் இம்மாதம் 31 ஆம் திகதி வரை மட்டுமே குறித்த இரண்டு மதுபான விற்பனை நிலையங்களிலும்,போத்தல் கள்ளு  விற்பனை நிலையத்திலும் அவை விற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்,எதிர்வரும் 01 ஆம் (01-01-2013) திகதி முதல் அவவிடத்தில் மதுபானப்பொருட்கள் விற்பதற்கான  அனுமதி பத்திரம் வழங்கப்படாது என உறுதியளிக்கப்பட்டது.

 இந்த நிலையில் மதியம் 01 மணியளவில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்ட நிலையில் மக்கள் வீடுகளுககுச் சென்றனர். குறித்த பேரணியில் ஆண்கள்,பெண்கள்,வயோதிபர்கள்,சிறுவர்,சிறுமிகள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்.{படங்கள் } Reviewed by NEWMANNAR on December 19, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.