அண்மைய செய்திகள்

recent
-

போராட்டம் மீனவ சமூகத்தின் தொடர் கதையா?நாம் இந்நாட்டின் சபிக்கப்பட்ட சமூகமா?-மன்னார் அரச அதிபருக்கு வழங்கிய மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மன்னார் மாவட்ட மீனவர்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இன்று வியாழக்கிழமை 21 ஆம் திகதி   மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.





 மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசம் இதற்காண ஏற்பாடுகளை மேறகொண்டதாக அதன் தலைவர் நூர் முஹமட் முகம்மது  ஆலம் தெரிவித்தார்.

குறிதத்த கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,,,

  
இந்திய மற்றும் உள்ளுர் இழுவைப்படகுகளின் தொழில்முறைகள் முற்றாக 
   நிறுத்தப்படவேண்டும், பாஸ் நடைமுறை நீக்கப்பட்டு பதிலாக கடற்றொழிலாளர் அடையாள அட்டை மாத்திரம் வழங்கப்படவேண்டும்,சிலிண்டர் மூலம் கரையோரத்தில் தொழில் செய்வதை நிறுத்தி,குறித்தொதுக்கப்பட்ட  பகுதியில் மாத்திரம் தொழில் செய்ய அனுமதித்தல். ஊள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்து குறித்த போராட்டத்தை நடாத்தியுள்ளோம் 


மதிப்பார்ந்த மக்களே! அரச அதிகாரிகளே, கௌரவ மக்கள் பிரதிநிதிகளே, கௌரவ அமைச்சர்களே, புத்தி ஜீவிகளே, ஊடகவியலாளர்களே, சமூகத் தலைவர்களே, எமது மீனவர்களின் அவல நிலையை ஒரு கணம் சிந்தியுங்கள். நாம் முன்வைக்கும் இவ்விடயங்கள் போராடித்தான் பெற வேண்டுமா?

, நாம் புதிதாக ஒன்றை அல்லது முடியாத ஒன்றையா கேட்கின்றோம். அந்நிய நாட்டுக்கு எதிராகவும் அவர்களின் அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டிய நாம், நம்நாட்டுக்குள் எமது தேவையைப்பெற போராடவேண்டியுள்ளது.

 மன்னார் வாழ் மீனவர்களின் வாழ்க்கையை ஏனைய மீனவர்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். எமது மீனவர்கள் கஷ்டமான வாழ்க்கை முறைக்கு உட்பட்டிருப்பது உங்களுக்கு புரியும் எமது கடல் வளங்களை அனுபவிக்க முடியாதவர்களாக நாம் இருக்க, எந்த அனுமதியுமின்றி இந்திய நாட்டு மீனவர்கள் எமது கடல் வளங்களை சூறையாடுகின்றனர்.

இவர்கள் இலங்கை அரசிடம் பாஸ் (அனுமதி) பெற்று தொழில் புரிகின்றனரா? அல்லது இலங்கை குடியுரிமை பெற்று தொழில் புரிகின்றனரா? அல்லது எமது கடல் வளம் அவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதா? நாளாந்தம் 2000 தொடக்கம் 4000 வரையிலான பாரிய இழுவைப் படகுகள் எமது குறுகிய கடற் பரப்பில் தொழில் புரிவதால், எமது மீனவர்கள் தொழிலின்றி தமது வாழ்வாதாரத்திற்காக போராட வேண்டியுள்ளது. மேலும் வாரத்தில் மூன்று தினங்களே நாம் தொழில் செய்ய முடியுமென்ற நிலையுமுள்ளது. 

எமது மீனவர்களால் கடலில் விடப்படும் பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப் படகினால் இழுத்துச் செல்லப்படுகின்றது. இவ் இழப்பின் பெறுமதி பல இலட்சம் ரூபாய்களாகும். மன்னார் மற்றும் வட பகுதி முழுவதிலும் இவர்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. தற்போது அதையும் தாண்டி கற்பிட்டி, புத்தளம்  என விரிந்து செல்கின்றது.

இன்னும் ஓரிரு வருடங்களில் சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு என இலங்கை முழுவதும் இவர்களின் ஆதிக்கம் தொடரப் போகின்றது. இதனால் இலங்கை வாழ் அனைத்து மீனவர்களின் வாழ்வாதாரம்  இவ் இழுவைப் படகுகளினால் பாதிக்கப்படும். 

அதேவேளை சட்டவிரோதமாக எமது வளங்களை சுரண்டும்  இந்திய மீனவர்களை எமது கடற்படை கட்டுப்படுத்தும் போது இந்திய அரசியல் தலைமைத்துவங்கள் எமது கடற்பரப்பை தமக்குரிய கடற் பிரதேசம் என்பதை வலியுறுத்தி போராட்டங்களை தற்போதும்முன்னெடுக்கின்றன.

இவ் இழுவைப்படகுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள்.

1) மீன் இனங்கள் வாழ்வதற்கு இயற்கையால் வழங்கப்பட்ட முருகைகற்களும் பவளப் பாறைகளும் அழிக்கப்படுகின்றன.
2) வாழ்வாதாரத்திற்கு துணைபுரியும் பல மீனினங்கள் அரிகிப் போய் உள்ளன.
3) கடல்தாவரம் அழிக்கப்படுவதனால் மீன்களுக்கும் குஞ்சிகளுக்கும் தேவையான உணவும் அதற்கான பாதுகாப்பும் இல்லாமல் செய்யப்படுகின்றன.
4) இயற்கையாகவே இப்பகுதியில் உயிர் வாழும் பல அரியவகை கடல்வாழ் உயிரினங்கள்    அழிக்கப்படுகின்றன.
5) இழுவைப்படகுக்கு பயன்படுத்தும் மடி,வலைகளால் குஞ்சுமீன் இனங்கள் பிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

எனவே இப்பாதிப்புக்களிலிருந்து கடல் வளத்தைப் பாதுகாத்து எமது அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டிய  பாரிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு, என்பதை மறந்து விடாதீர்கள். எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து இந்த சட்டவிரோத மீன்பிடி முறைக்கு தடைவிதிக்க வேண்டும்.

 இத் தொழிலுக்கு எதிராக கடுமையான சட்டம் இருந்தும் மீன்வளங்களையும் கடல் வளங்களையும் பாதுகாக்கமுடியாது திண்டாடுவதோடு, மீனவ சமூகத்தினர் தமது வாழ்வாதாரத்திற்காகவும் போராடவேண்டியுள்ளது. இயற்கை வளங்களை நாசம் செய்து துரித இலாபமீட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் போது நமது சமூகம் அழிக்கப்படுகிறது. என்பதை, உள்நாட்டில் இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உள்நாட்டுயுத்தம்  நிலவிய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ் நடைமுறை தற்போது யுத்தம் நிறைவடைந்து தொடர்வதும் அதற்காக பாதுகாப்புத் தரப்பால் கூறப்படும் காரணமும் பொருத்தமற்றது.

 மேலும் ஒவ்வொரு தொழில் முறைக்கும் கடல்அட்டை, சங்கு, மீன்பிடி போன்றவற்றுக்கு வழங்கப்படும் தனித்தனியான பாஸ் நடைமுறை நீக்கப்பட்டு கடற்றொழிலாளர் அடையாள அட்டை மாத்திரம் கொண்டு, கடல் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். என, உரிய தரப்பினரை கோருகின்றோம். 

ஆழ் கடலில் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்ட சிலிண்டர் கொண்டு கடல்அட்டை, சங்கு குளித்தல் தொழிலை, எமது கரையோரப் பகுதியில் தொழில் புரிவதை நிறுத்தி இத்தொழிலுக்கென குறித்தொதுக்கப்பட்ட பகுதியில் தொழில் புரிவதை உறுதிப்படுத்துவதுடன், 

நாம் இலங்கை அரசுக்கும் அதன் சட்டத்துக்கும் கட்டுப்பட்ட மக்கள் என ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் மீன்பிடியை நம்பி தமது ஜீவனீபாயத்தை நடத்தும் எமது மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதும் அரசின் கடமையாகும். எமது கோரிக்கைகள் நிறைவேறாத தொடர் கதையானால் மீனவக்குடும்பங்கள் பட்டினி சாவினை நோக்கி பயணிக்கும். 

மேலும் அடுத்த தலைமுறையினருக்கு கடல் உணவினை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய நேரிடும். எனவே எமது கோரிக்கை நிறைவேற எம் வேண்டுகோள் ஒருமித்துஒலிக்க மீனவ சமூகம் சார்பாக நாம் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம். என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(மன்னார் நிருபர் Vinoth)
போராட்டம் மீனவ சமூகத்தின் தொடர் கதையா?நாம் இந்நாட்டின் சபிக்கப்பட்ட சமூகமா?-மன்னார் அரச அதிபருக்கு வழங்கிய மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. Reviewed by NEWMANNAR on February 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.