தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 173 குடும்பங்களை மடு வீதியில் குடியேற்ற ஏற்பாடு
மன்னார், மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்களில் ஒருதொகுதியினரை மடு பிரதான வீதியில் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள தம்பனைக்குளம் கிராமம், தொடர்ச்சியாக வெள்ளப் பாதிப்புக்குள்ளாகிவருகின்றது.
இந்நிலையில், இக்கிராமத்தில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமையவே அவர்களை மடு பிரதான வீதியில் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தம்பனைக்குளம் கிராமத்தில் சுமார் 320 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றபோதிலும், மிகவும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கும் 173 குடும்பங்களையே முதற்கட்டமாக குடியேற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மடு பிரதான வீதியில் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகைக்குச் சொந்தமான 25 ஏக்கர் காணியை எமக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும் அப்பகுதியிலுள்ள அரசாங்கக் காணிகளும் பெறப்பட்டு காணிக்கச்சேரி வைக்கப்பட்டு குறித்த 173 குடும்பங்களுக்கும் காணிகள் பிரித்துக்கொடுக்கப்பட்டு குடியேற்றம் செய்யப்படுமெனவும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கடந்த டிசெம்பர் மாதம் அடை மழையால் மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததனால் தம்பனைக்குளம் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து இக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 320 குடும்பங்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 173 குடும்பங்களை மடு வீதியில் குடியேற்ற ஏற்பாடு
Reviewed by NEWMANNAR
on
February 15, 2013
Rating:
No comments:
Post a Comment