பாடசாலைகள், அரச நிறுவனங்கள், திணைக்களங்களில் வெள்ளிதோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
.jpg)
இது தொடர்பில் அமைச்சரவை அனுமதியைப் பெற்று விசேட சுற்று நிருப மொன்றை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டு ள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதேவேளை, டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பாக முப்படை மற்றும் பொலிஸாருக்கு பயிற்சி வழங்கும் விசேட திட்டமொன்றையும் சுகாதார அமைச்சு நேற்று ஆரம்பித்துள்ளது.
இதன் கீழ் 200 பேருக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு சகல தரப்பினரையும் இணைத்து செயற்படுவது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அரச நிறுவனங்களில் டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து அரச அதிபர்கள், மற்றும் கிராம உத்தியோகஸ்தர்களின் பங்களிப்புடன் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எச்.பீ. அபேகோன் சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் பாலித மஹிபால ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அரச நிறுவனங்களில் டெங்கு ஒழிக்க முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டது.
அரச நிறுவனங்களில் டெங்கு பரவும் இடங்கள் அதிகளவில் காணப்படுவதால், பிரதி வெள்ளிக்கிழமைகளில் சகல அரச நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
டெங்கு பரவுவதைத் தடுக்க சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என்பதால் பொது நிர்வாக அமைச்சு மாவட்ட மற்றும் பிரதேச குழுக்களினூடாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் அது குறித்து வாராந்தம் பொது நிர்வாக அமைச்சிற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் டெங்கு பரவும் இடங்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாரத்தில் ஒருநாள் சகல பாடசாலைகளிலும் டெங்கு பரவும் இடங்களை ஒழிக்க சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் தீர்மானித்துள்ளன.
இதேவேளை டெங்கு ஒழிப்பு குறித்து படையினருக்கும் பொலிஸாருக்கும் விசேட பயிற்சி வழங்கும் நடவடிக்கை நேற்று பொரளை மருத்துவ ஆய்வு நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் விசேட அதிரடிப்படை வீரர்கள், மற்றும் பொலிஸார் அடங்கலான 75 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டன.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சினால் தனியாக முன்னெடுக்க முடியாததால் பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புப் பிரிவு என்பவற்றின் உதவியை பெற்று வருவதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் பாலித மஹிபால தெரிவித்தார்.
பாடசாலைகள், அரச நிறுவனங்கள், திணைக்களங்களில் வெள்ளிதோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
June 12, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment