அண்மைய செய்திகள்

recent
-

'கைதிகளின் உறவினர்கள் த.தே.கூவுக்கு பகிரங்க மடல்'

சிறைச்சாலைகளில் பலவருடங்களாக எவ்விதமான விசாரணைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் சார்பாக அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தனுக்கே இந்தக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தின் பிரதிகள், மன்னார் ஆண்டகைவ வண. இராயப்பு ஜோசப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக நடைபெற்ற கொடிய யுத்தத்தில் வடக்கு, கிழக்கை சேர்ந்த  தமிழ் மக்களாகிய நாம் சொல்லொனா துன்பங்களையும் பாதிப்புக்களையும், இழப்புக்களையும் அடைந்து ஏதுமற்ற எதிலிகளாய், இழப்பதற்கு இனிமேல் எதுவுமில்லை என்ற நிலையில் நடைப்பிணங்களாய் இருக்கின்றோம் என்பது நீங்கள் அறிந்ததேயாகும்.

'எதிர்காலமே இருள்' என்ற நிலையில் சிறையில் இருப்பதனால் பொருளாதார ரீதியாக அடிமட்ட பிரச்சினைகள், பிள்ளைகளின் கல்விரீதியான செலவுகள் மற்றும் வாழ்விடம் என்பவைகளுடன் சட்டத்தரணி தொடர்பான உதவிகள் என பல உதவிகள் தொடர்பாக நாம் பலமுறை கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றோம். 

இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு எதுவிதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

வடக்கு,கிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாம் உங்களிடம் எதிர்பார்த்திருப்பது, அரசியல் கைதிகளினுடைய அடிப்படை விடயங்களான குடும்ப நலன் மற்றும் சட்டரீதியான உதவிகளையேயாகும். இது தொடர்பாக கூட்டமைப்பிடம் ஏதாவது திட்டங்கள் உண்டா?

தமிழ் அரசியல் கைதிகளில், திருமணமானவர்களின் எண்ணிக்கை,உடல் பாதிப்பானவர்களின் விபரங்கள் உள்ளிட்ட தரவுகள் தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டனவா? 

இவ்விடயங்கள் தொடர்பில் தங்களின் காரியாலங்களில் முறையிடும் போது அதற்கான நிவாரணங்களை பெற்றுக்கொள்ளமுடியாததையிட்டு மிகவேதனையாகவுள்ளது. 

பல கைதிகளின், பிள்ளைகள் கல்வியை தொடர புத்தகம், அப்பியாச கொப்பிகள்,எழுது கருவிகள் இன்றியும்,ஒருவேலை உணவுக்கே கஸ்டப்படும் பொருளாதாரமற்ற நிலையில் கல்வியையும் இடைநிறுத்தியுள்ளனர்.

தமிழ்த்தேசியக்கூட்டமைபில் சட்டத்தரணிகள் பலர் இருந்தும் கூட ஏன்? எங்களுடைய பிள்ளைகளின் சட்டநடவடிக்கைக்கு உதவ முன்வரவில்லை? தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக காட்டுக்கின்ற அக்கறை இந்த விடயத்தில் கூட்டமைப்பிற்கு இல்லாமல் போனது ஏன்?

கடந்தகால கசப்பான அரசியல் சூழ்நிலையே இன்று இவர்களின் நீண்டகால சிறைவாழ்க்கைக்கான காரணமாகும். இதனை நீங்கள் கூட பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றீர்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நலன்புரி குழுவொன்றை நியமிக்கவேண்டும் அந்த நலன்புரி குழுவுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து உதவிகள் கிடைக்கும். அந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதே எங்களுடைய எதிர்ப்பார்ப்பாகும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கைதிகளின் உறவினர்கள் த.தே.கூவுக்கு பகிரங்க மடல்' Reviewed by NEWMANNAR on June 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.