'அக்போபுர' வாக மாறும் இறம்பைவெட்டி தமிழ் கிராமம்: தேர்தல் சட்டத்தை மீறும் அரசு- ஆனந்தன் எம் பி குற்றச்சாட்டு
அத்துடன், பூர்வீகத் தமிழ்க் கிராமமான இறம்பைவெட்டி, 'அக்போபுர' என தனிச் சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை(12-09-2013) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ;
பழம்பெரும் பூர்வீகத் தமிழ்க் கிராமமான இறம்பைவெட்டிக் குளத்தின் கீழ் வரும் காணிகள் தமிழ் மக்களால் தமது வாழ்வாதரத் தேவைகளுக்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது. அயலில் உள்ள தமிழ்க் கிராம மக்களும் இக்காணிகளுக்கு உரித்துடையவர்களாயிருந்தனர்.
1977 ஆம் ஆண்டு கலவரத்தின்போது இடம் பெயர்ந்த காணிக்காரர்கள் மீளவும் அங்கு குடியேறியவேளை, இலங்கையின் வேறு பாகங்களிலிருந்து உயிர் தப்பிய தமிழ் மக்களும் மேலதிகமாக இங்கு வந்து இக்காணிகளை ஆட்சிப்படுத்தினர்.
தற்போது, வடமாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஓகஸ்ட், 30ம் திகதி வடமாகாண ஆளுனர் இராணுவ உயர் அதிகாரி ஒருவர், மற்றும் பௌத்த துறவி ஆகியோர் இங்கு புதிதாகக் காடழித்துக் காணி வழங்குவது என்ற போர்வையில் பூர்வீகத் தமிழருக்குச் சொந்தமான காணிகளையும் சேர்த்துப் புதிய குடியிருப்பாகப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
அன்றைய தினம் காத்தார்சின்னக்குளம் கிராம அலுவலர் பிரிவில் வசித்து வந்த காணியற்ற உபகுடும்பங்களுக்கும் 80 இற்கும் மேற்பட்ட அயல் கிராம சிங்களவருக்கும் இங்கு ஆளுனரால் காணி வழங்கப்பட்டன. மேலும், 225 சிங்களக் குடும்பங்களை இங்கே குடியேற்றவும் ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முழுக்க முழுக்க இராணுவத்தினரின் மேற்பார்வையிலேயே இக்குடியேற்ற வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பூர்வீகத் தமிழ் கிராமத்தின் பெயரும் சிங்கள நாமம் சூட்டப்;பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதுடன் தமிழர் பெரும்பான்மையின் செறிவைக் குறைத்து வாக்கு வீதத்தைக் குறைக்கும் அரசின் நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தேர்தல் காலத்தில் காணிகள் முதலான நிவாரணங்கள் வழங்கலை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ள அரசானது, சட்டத்தை மீறி காணிகள் வழங்கல், சமுர்த்திக் கொடுப்பனவுகள், நிவாரணங்கள் வழங்கல் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள முற்பணம் வழங்குதல் மற்றும் ஆளும் கட்சி வேட்பாளர்களின் ' கட்அவுட்கள்' பேனர்கள், பதாகைகள், கொடிகள் முதலானவற்றுடன் ஒலி பெருக்கி உபயோகத்தையும் அனுமதித்தே வருவதானது கண்டிக்கத்தக்கதும் அடிப்படை உரிமைமீறும் செயலுமாகும் எனவும் அவரது அறிக்கையில் தெரிவிககப்பட்டுள்ளது.
'அக்போபுர' வாக மாறும் இறம்பைவெட்டி தமிழ் கிராமம்: தேர்தல் சட்டத்தை மீறும் அரசு- ஆனந்தன் எம் பி குற்றச்சாட்டு
Reviewed by Admin
on
September 12, 2013
Rating:

No comments:
Post a Comment