வடக்குத் தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்டு தீர்வை பெற்றுத்தர வேண்டும் : பா.அரியநேத்திரன்
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கில் எந்த தேர்தல் நடந்தாலும் அதில் தமிழ் மக்கள் வடகிழக்கு இணைந்த சுயாட்சி தீர்வுக்கே ஆணை வழங்கியுள்ளனர். அது பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அல்லது மாகாணசபை தேர்தலாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த தேர்தலானாலும் சரி வடகிழக்கு தமிழர்கள் தங்களுக்கான சுயாட்சி தீர்வையே திரும்ப திரும்ப வேண்டி நிற்கின்றனர் என்பதை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
தந்தை செல்வா காலம் தொடங்கி வரதராஜ பெருமாள் முதலமைச்சரான காலம் வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் ஒரே விடயத்தையே வலியுறுத்தி வந்துள்ளனர். தமிழ் மக்கள் கோருவது தங்களது நிலத்தை தாங்களே ஆளக்கூடிய ஒரு அரசியல் தீர்வையே. அந்த வகையிலேயே 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ள இந்த வடமாகாணசபை தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தங்களுக்கான நியாயமான சுயாட்சி தீர்வை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ் மக்கள் மாகாணசபை தீர்வை ஒரு போதும் ஏற்றக்கொள்ள வில்லை. அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் இந்த மாகாணசபை அதிகாரம் எங்களுக்கு வேண்டாம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துச்சொல்ல வேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கும், கூட்டமைப்புக்கு ஏற்பட்டதாலேயே நாம் இந்த தேர்தலை பயன்படுத்தியிருந்தோம். அந்த வகையிலேயே தமிழ் மக்களும் அதனை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர்.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடகிழக்கு இணைந்த தாயகம், போர்க்குற்ற விசாரணை அவசியம், இராணுவம் வடகிழக்கில் இருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும், தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும், வடகிழக்கில் உள்ள மதஸ்தலங்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கியிருந்தது.
அதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டதன் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தனர் இதன்படி மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையையும் தமிழ் மக்கள் எங்களுக்கு வழங்கியிருக்கின்றனர்.
இந்த தேர்தல் முடிவுகளானது தமிழ் மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிங்கள ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவாக தோற்றம் பெற்றது என்பதோடு தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் பிரயோகித்த கொத்துக் குண்டுகளுக்கும், யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினால் மக்கள் மீதும், பெண்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளுக்குமான பதிலடியாகவே அமைந்துள்ளது.
மிக முக்கியமாக சொல்வதானால் வடகிழக்கில் ஒரு யுத்தம் உருவாகுவதற்கு எந்தக் காரணிகள் அடிப்படையாக அமைந்திருந்ததோ அந்தக் காரணிகள் அனைத்தும் இன்றும் உள்ளது அவற்றுக்கு தீர்வு காண்பதற்கே நாங்கள் இந்த வடமாகாணசபை தேர்தலை பயன்படுத்தவுள்ளோம். மாறாக இந்த மாகாணசபைத் தேர்தல் ஒரு முடிவல்ல இது ஒரு சிறந்த ஆரம்பமாகும்.
இதே போன்ற ஒரு ஜனநாயக ஆணையை கடந்த 1987ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள் ஆனால் அன்றைய சிங்கள அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளாததன் விளைவாகவே ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. மீண்டும் இன்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் அதே ஆணையை தமிழ் மக்கள் வழங்கியிருக்கின்றார்கள் என்றால் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதனாலேயே எனவே இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இங்குள்ள யதார்த்த நிலமையை புரிந்துகொண்டு உடனடியாக தமிழ் மக்களுக்கான அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதோடு தமிழ் மக்கள் கோரும் வடகிழக்கு இணைந்த சுயாட்சி தீர்வை பெற்றுத் தருவதற்கு முன்வர வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டு கோளாகும் என்றார்.
வடக்குத் தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்டு தீர்வை பெற்றுத்தர வேண்டும் : பா.அரியநேத்திரன்
Reviewed by Admin
on
September 23, 2013
Rating:

No comments:
Post a Comment