வடமாகாண முதலமைச்சர் பதவிப்பிரமாணம்: தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டனம்
வடமாகாண முதலமைச்சர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டித்துள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு மாகாணசபையின் ஏனைய உறுப்பினர்கள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசின் அடக்குமுறைக்கு எதிராக, அந்த அடக்குமுறைக்குள் இருந்து கொண்டு, அரசின் சலுகை, அபிவிருத்தி மாயைகளுக்குள் சிக்கி விடாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததன் மூலம், தமது எதிர்ப்பை மக்கள் காட்டியுள்ளனர்.
இத்தருணத்தில் வட மாகாண முதலமைச்சராக சி. வி. விக்கினேஸ்வரன் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யத் தீர்மானித்திருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்'என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அவர்களின் கை விரலில் பூசப்பட்ட மை காய்வதற்கு முன் தமிழ்க் கூட்டமைப்பு தூக்கி வீசி விட்டது என்றும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை தெரிவித்திருக்கின்றது.
இந்தச் செயற்பாடு மஹிந்த ராஜபக்க்ஷ அரசுக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணை அழுத்தத்தைக் குறைத்து விடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச விசாரணை ஒன்றை எதிர்வரும் மார்ச் மாதம் கோர வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்திருக்கும் இந் நிலையில் இச் செயற்பாடு தவறான சமிக்கைகளை சர்வதேசத்திற்கு கொடுத்துவிடும் என தெரிவித்துள்ள தமிழ் சட்டத்தரணிகள் பேரவை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.(பிபிசி)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் இவ்வாறான செயற்பாடுகளை ஏனைய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரிக்கை விடப்பட்டிருக்கின்றது.
வடமாகாண முதலமைச்சர் பதவிப்பிரமாணம்: தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டனம்
Reviewed by Admin
on
October 06, 2013
Rating:

No comments:
Post a Comment