வடக்கின் கல்வியை மேம்படுத்த ஆலோசனை கேட்கிறது அமைச்சு
வடக்கு மாகாணக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கல்விசார் பிரச்சினைகளையும் அவற்றின் தீர்வுகளுக்கான முன் மொழிகைளயும் அனுப்பி வைக்குமாறு பொது மக்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. வடக்கு மாகாணக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான மீளாய்வு மாநாடு மாகாணக் கல்வி அமைச்சில் நேற்று முன் தினம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவின் கருத்துக்கு அமைய தற்போதைய கல்வி நிலையை ஆராய்ந்து மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை நடை முறைப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாணத்திலுள்ள கல்வியியலாளர்களை உள்ளடக்கி 6 குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கற்றலும் கற்பித்தலும், மாணவர் ஆசிரியர் ஒழுக்கம் (ஆற்றுப்படுத்துகை), ஆசிரியர்கள், நிர்வாகிகள் சம்பந்தமானவை' (நிதி தொடர்பானது) (உத்தி யோகத்தர் தேவைகள், மாணவர் தேவைகள்), கல்வி நிர்வாக அமைப்புக்களும் அதற்கான மாற்றீடுகளும், திட்டமிடல் மற்றும் தரவுகள் மையமான ஆராய்ச்சியும் அபிவிருத்தியும் என ஆறு குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த 6 குழுக்களும் வடக்கு மாகாணத்தின் கல்விசார் பிரச்சினைகளையும் அதற்குரிய தீர்வுகளையும் இனங்கான உள்ளன. அதன் ஒரு கட்டமாகவே பொது மக்கள் ஆசிரியர்கள், கல்விமான்கள், பொது அமைப்புகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடமிருந்து கல்விசார் பிரச்சினைகளையும் அவற்றின் தீர்வுகளுக்கான முன்மொழிவுகளையும் வடக்கு மாகாண கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
கருத்துக்கள், முன்மொழிவுகள் ஆகியவற்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூலமாக கலாநிதி நா. எதிர்வீரசிங்கம், இணையக் கற்கை நெறி நிறுவனம், 66, கட்டைப்பாலி ஒழுங்கை, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அல்லது ethirveerasingam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வடமாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கின் கல்வியை மேம்படுத்த ஆலோசனை கேட்கிறது அமைச்சு
Reviewed by Admin
on
October 24, 2013
Rating:

No comments:
Post a Comment