அண்மைய செய்திகள்

recent
-

அரசுடன் இணங்கிப்போவோம்’; கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன?!

இலங்கை அரசுடன் முரண்படுவதைத் தவிர்த்து பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் வாதிட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் கூட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. 

 இதன் போது, பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பிலும் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்பது தொடர்பிலும் தீவிரமாக ஆராயப்பட்டது. கூட்டத்தின் பின்னர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார். இருப்பினும் அன்றைய ஒன்றுகூடலில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் சில வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. 

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என்றும் தெரிவுக்குழுவிற்குச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றனர். இது தொடர்பில் சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்: எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நவிப்பிள்ளையால் சமர்க்கப்படவுள்ள அறிக்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற தீர்மானம் தோல்வியடையும் நிலை ஏற்படலாம்.

 ஐ.நா பாதுகாப்பு சபையில் இணைந்து கொள்ள இருக்கும் ஐந்து நாடுகளும் நவிப்பிள்ளையின் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கும் நிலை ஏற்படுமோ தெரியாது என்பதால் சில வேளை தீர்மானம் தோற்றுப்போகலாம். இதனால் அரசாங்கத்துடன் வீணான முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் தவிர்ப்பதே நல்லது என்று தெரிவித்ததுடன், அரசாங்கத்துடன் முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ளாமல் இணங்கிச் செயற்படுவதன் ஊடாக வடக்கு மாகாண சபைக்கான உதவிகளைப் பெற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். ஆகவே கூட்டமைப்பு இரட்டை நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

 ஆளும் தரப்பிலுள்ள வடக்கு மாகாணசபை அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லும் போக்கையும் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நிலைப்பாட்டையும் எடுக்கவேண்டும் என தெரிவித்திருக்கின்றார். இதேவேளை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்: இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் முரண் நிலைப்பாட்டில் இருப்பது தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய எந்த ஒரு சிறிய தீர்வினையும் பெறமுடியாத நிலையினை ஏற்படுத்திவிடும். தொடர்ந்தும் இவ்வாறு எதிர்த்துக்கொண்டிருக்காமல் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளவேண்டும்.

 அதேபோல பொதுநலவாய மாநாட்டில் பங்குகொள்வதன் மூலம் எதிர்காலத்தில் அரசுடன் இணைந்து மக்களுக்கான பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கின்றார். இதேவேளை இந்த கருத்துகள் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவருகின்றது. மாவை. சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில்: இந்தியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த நீங்கள் (இரா.சம்பந்தன்) பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்று தெளிவாக தெரிவித்திருந்தீர்கள்.

 இந்த நிலையில் கூட்டமைப்பு அந்த மாநாட்டில் பங்கேற்பதனை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார். மேலும், எமது நகர்வுகள் அனைத்தும் நவிப்பிள்ளையின் நடவடிக்கையையும்இ பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் இலங்கைமீது கொண்டுள்ள அபிப்பிராயங்களையும் சிறுமைப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்.

 சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்:

 கூட்டமைப்பு இரட்டை நிலைப்பாட்டினை எடுக்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாது என்பதையே மிகத் தெளிவாக தமிழ் மக்கள் வடக்கு தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருகிறார்கள். மேலும், அரசாங்கம் அனைத்துச் சிறுபான்மையினரையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு சிங்கள பௌத்த மக்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளவே முயல்கிறது. எனவே அரசாங்கத்துடன் இணங்கிப்போவதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை என்று தெரிவித்தார்.

 மேலும், தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் போராடிப் பெறவேண்டிய நிலையே கூட்டமைப்புக்கு உள்ளது. மாறாக அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றவேண்டிய தேவையில்லை எனத் தெரிவித்திருக்கின்றார். இரு சாராரும் நீண்ட நேரம் மேற்கொண்ட கருத்து மோதல்களை அடுத்தே பொதுநலவாய மாநாட்டினை புறக்கணிப்பது எனத் தீர்மானித்ததாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இறுதி நேரத்தில் சம்பந்தன், சுமந்திரன் கூட்டணியின் இறுதித் தீர்மானத்துடன் சி.வி.விக்னேஸ்வரன் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார் கொழும்பின் சட்டத்தரணி ஒருவர்.


அரசுடன் இணங்கிப்போவோம்’; கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன?! Reviewed by Author on October 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.