மாகாண அமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல். வடமாகாண ஆளுநரின் அழைப்பை நிராகரித்த முதலமைச்சர்.
வடமாகாண சபையில் நடைபெற்ற அபிவிருத்திகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக
வடமாகாண முதலமைச்சரையும் அமைச்சர்களையும் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி அழைத்துள்ள அந்த அழைப்பினை முதலமைச்சர் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன .
இதனால் ஆளுநரின் இந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது என வடமாகாண சபையின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,
வடக்கு மாகாண சபையின் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி வடமாகாணத்தில் இதுவரைகாலமும் இடம்பெற்ற அபிவிருத்திகள் , மாகாண சபையின் நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக வடமாகாண ஆளுநர் முதலமைச்சருக்கும் மாகாண அமைச்சர்களுக்கும் அழைப்பினை அனுப்பியுள்ளார் .
இந்தக்கூட்டத்திற்குரிய ஏற்பாடுகளும் மாகாண சபையின் உயர் அதிகாரிகளால் ஆளுநரின் அறிவித்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது . இந் நிலையில் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆளுநரின் அழைப்பினை நிராகரித்துள்ளார் .
தமக்கு குறித்த தினத்தில் குறித்த நேரத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வு ஒன்று இருப்பதால் தம்மால் அந்தக் கூட்டத்திற்குச் சமுகமளிக்க முடியாது என எழுத்து மூலமாக ஆளுநருக்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார் . இந்த அறிவித்தலின் பிரதிகளை மாகாண அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ளதுடன் இவ் விடயத்தினை விளக்கி இக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இதேவேளை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் யாழ் . இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது . இக் கலந்துரையாடலில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வில் கலந்துரையாடப்படவேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது .
இக் கலந்துரையாடலையே வடக்கின் ஆளுநர் தனது தலைமையில் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் இதனை முதலமைச்சர் நிராகரித்திருந்ததாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது .
மாகாண அமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல். வடமாகாண ஆளுநரின் அழைப்பை நிராகரித்த முதலமைச்சர்.
Reviewed by NEWMANNAR
on
November 10, 2013
Rating:

No comments:
Post a Comment