அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாணசபையின் அமர்வின் போது இலங்கை தமிழ்; அரசு கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் பிறிமுஸ் சிராய்வா அவர்களின் கன்னி உரை

என்னை வாழ்வின் எல்லா வழிகளிலும் வழி நடத்தி துணையாயிருந்து வருகின்ற எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளை முதலில் தொழுது நிற்கின்றேன்.

என்னை உலகுக்கு அளித்து கல்வி கற்பித்து உருவாக்கி நான் வாழ்வில் இந்நிலைக்கு வர உறுதுணையாக இருந்த எனது பெற்றோர்கள் எனக்கு கல்வியூட்டிய ஆசான்களின் பாதங்களைத் தாழ்ச்சியோடு பணிந்து இந்தப் பேரவையிலே எனது கன்னி உரையை ஆற்ற விரும்புகின்றேன்.

வரலாற்றின் ஏடுகளில் தனது முதலாவது அத்தியாயத்தை எழுத ஆரம்பித்திருக்கும் இந்தப்பேரவையை தலைமை தாங்கி வழி நடாத்திக்கொண்டிருக்கும் எமது பெருமதிப்பிற்குரிய உயர் திரு கே.சி. சிவஞானம் ஐயா அவர்களே, சரித்திர முக்கியத்துவம் பெறுகின்ற இந்த முதலாவது வடமாகாண சபையின் முதலமைச்சர் மாண்புமிகு விக்னேஸ்வரன் ஐயா அவர்களே, இச்சபையின் கௌரவத்துக்குரிய அமைச்சர் பெருமக்களே, கௌரவத்திற்குரிய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே,கௌரவத்திற்குரிய இச்சபையின் அனைத்து உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கங்கள்
.
எத்தனையோ ஆயிரம் சிரமங்களுக்கு மத்தியிலும் இன்னும் உயிர்த்துடிப்புடனும், உணர்வுகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வட மாகாண வாக்காளர் பெருமக்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
 உங்களால் நாம் அமோக வெற்றி பெற்றோம். வரலாறு படைத்தோம்.
அடுத்ததாக என்னை முதன்மை வெற்றியாளனாகத் தேர்ந்தெடுத்த எனது மன்னார் மாவட்ட வாக்காளர் பெருமக்கள் என்மேல் அவர்கள் கொண்டிருந்த மட்டற்ற அன்பினாலும் மதிப்பினாலும் தங்கள் வாக்குகளை எனக்கு அமோகமாக அளித்து முதன்மையாக வெற்றி பெறச்செய்தார்கள். அவர்களை இந்த வேளையில் மட்டுமல்ல எப்போதும் நன்றியுடன் நினைவில் கொள்வேன்.

எனது வெற்றிக்காக உழைத்த எனது நண்பர்கள், ஊர்மக்கள் - வாகன வசதிகளை ஏற்படுத்தி தந்தவர்கள், இவர்களின் அயராத உழைப்பினால், இரவு பகல் பாராது, ஊன் உறக்கமின்றி எடுத்த முயற்சிதான் எனது வெற்றி. இவர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த நன்றிகள் சொல்வதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எமது மன்னார் ஆயர் அவர்களை பெருமையோடு நினைவிற்கொள்கின்றேன். தமிழ் மக்களின் சுய நிர்ணய வாழ்வுக்காக சதா சிந்தித்து ஆவன செய்யும் ஓர் ஒப்பற்ற மனிதர். எம்மை எல்லா வழிகளிலும் வழிநடாத்துபவர், இந்தப் பேரவையின் சார்பில் அவருக்கு எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்நாள் இலங்கையின் வரலாற்றிலே சிறப்பாக வட மாகாணத்தின் வரலாற்றிலே - இந்த வட மாகாணத்தைத் தாயகமாகக் கொண்டு வாழ்கின்ற தமிழர்களின் வரலாற்றிலே ஒரு பொன்னான நாள். இஸ்ராயேலரின் வரலாற்றிலே அவர்கள் எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து
விடுவிக்கப்பட்டு 40 ஆண்டுகள் பாலை வனத்திலே, கால் நடையாக கானான் தேசத்தை அடைந்ததுபோல் 30 ஆண்டுகளின் கொடிய உள்நாட்டுப் போரின் பின் நாம் இந்த அரங்கிலே கூடியுள்ளோம்.

இந்த நாளுக்குப் பின்னால் அல்லது இந்த இடத்தை வந்தடைவதற்கு எத்தனையோ துயரங்களைக் கடந்து வந்துள்ளோம். எத்தனை மரணங்கள், எத்தனை அங்கவீனங்கள், எத்தனை கொத்திழப்புக்கள், எவ்வளவு கண்ணீர்கள் - சிதைந்து போன குடும்பங்கள் எத்தனை, விதவைகள் எத்தனை, அனாதைக்குழந்தைகள் எவ்வளவு?

இவற்றை நான் இங்கு குறிப்பிடுவது இந்த நாளின் பௌத்திரத்தை – கண்ணியத்தை கலைப்பதற்கல்ல, அதற்குப் பின்னால் மறைந்திருக்கின்ற பொறுப்புக்களைச் சுட்டிக்காட்டவே அன்றி வேறில்லை.
மக்கள் தாம் கடந்து வந்த ஆயிரம் துன்பங்களுக்குப்பின்னாலும் தங்கள் நிலையில் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார்கள். அதனால் மக்கள் எமக்கு அமோக ஆதரவளித்து எம்மை பெரும்பான்மையாக வெற்றி பெறச்செய்துள்ளார்கள். அந்த மக்களுக்கு நன்றி சொல்வது மட்டுமல்ல பணி செய்ய வேண்டிய பொறுப்பும் நம்மிடம் உண்டு.

வடமாகாணம் முழுவதும் உள்ள மக்கள் தொகையை விட பிரச்சினைகளின் தொகைதான் அதிகமாக இருப்பதாக தெரிகின்றது.எல்லா மாவட்டங்களிலும் பெருமளவிலான காணி சுவீகரிப்பும், பரிமாற்றங்களும் நடைபெறுகின்றன. 500, 1000 ஏக்கர்களாக இந்த மாகாணத்தின் மண் விலை போகின்றது அல்லது சுவீகரிக்கப்படுகின்றது.

அபிவிருத்தி என்ற பெயரில் நுழைகின்ற நவீன- கவர்ச்சிகரமான செயற்பாடுகள் மக்களை தமது பண்பாடு கலாச்சாரம் வாழ்வுமுறை என்ற கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையிலிருந்து நழுவிப்போக ஊக்குவிக்கின்றன. இதற்குத் துணைபோகின்றன வாழ்க்கைச் செலவின் ஏற்றம்.(விலைவாசி ஏற்றம்) கட்டியெழுப்பப்பட வேண்டிய வாழ்வாதாரமும் கைவிடப்பட்டிருக்கின்ற குக்கிராமங்களும், கட்டியெழுப்பப்படவேண்டிய விவசாயம், மீன்பிடி, நீர்ப்பாசணம் என்பனவும் இளைஞர் உருவாக்கமும்.
திறந்த பொருளாதாரக் கொள்கையினால் உள்ளுர் சந்தைகளில் வந்து குவியும் உணவுப்பொருட்கள் உட்பட பாவனைப்பொருட்கள். இதனால் மவுசு இழந்து போகும் எமது உள்ளுர் உற்பத்திப்பொருட்கள்.
காலநிலையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பெரிய அளவிலான காடழிப்பும் அற்குத் துணைபோகின்ற பணம் படைத்தவர்களும் அரச யந்திரமும்.
தென்னிலங்கை மக்கள் அரசினதும்- படையினரினதும் அனுசரணையிலும்- பாதுகாப்புடனும் வகை தொகையின்றிக் குடியேற்றப்படுதல்.
அரச ஊழியர்கள் மேல் சுமத்தப்படுகின்ற கட்டாய சிங்கள மொழித்திணிப்பு, இவையாவும் மாகாணம் முழுவதும் மிகமிக மௌனமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

எமது மன்னார் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மேற்சொன்ன சகல சவால்களுக்கும் நாமும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
இவை தவிர மன்னார்தீவிலே வேறுவிதமாக அனர்த்தங்களுக்கும் நாம் முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

மீள் குடியேறிய பல குக்கிராம மக்கள் அரசின் எத்தனையோ மீள்குடியேற்றத்திட்டங்களின் அமுலாக்கத்தின் பின்பும் தண்ணீர் வசதியின்றி- கிராமத்துக்கு ஒரு கழிப்பறை கூட இன்றி ஓலைக்;குச்சிகளில் கோடை வெயிலில் வதங்கியும், மாரி மழையில் நடுங்கியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குடி நீர்ப்பிரச்சினைகளுக்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.

பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்ட தாதுமணல் அகழ்வு பல சவால்களுக்கு மத்தியில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை மக்களை மன்னாரின் மண்ணில் குடியேற்றல் சத்தமில்லாத யுத்தமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. கசுவத்தை என்ற மரமுந்திரிகைத் தோட்டத்திலும், மன்னார் மதவாச்சி வீதியின் இரு மருங்கிலும் இன்னும் பல இடங்களிலும் இவை அரங்கேறுகின்றன.
 வட மத்திய, வடமேல், ஊவா சப்ரகமூவ போன்ற மாகாணங்களில் பல இலட்சம் சதுரமைல் காணிகள் எங்களைப் பண்படுத்துங்கள், வளப்படுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்க, மன்னார் மாவட்டத்தில் தனி ஒருவருக்கு 8, 10  பேர்ச் காணித்துண்டுகளையும் அதிலொரு வீட்டையும் கட்டி சிங்கள சகோதரர்களைக் பலவந்தமாக குடியேற்றுவது மன்னார் மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையோராக்குவதற்காகவா?

பாதுகாப்புப்படையினர் பல ஏக்கர் கணக்கான காணிகளை தனதாக்கிக்கொள்கின்றனர். தனியாரின் உறுதிக்காணிகளும் கோவில்கள், ஆலயங்களுக்குச் சொந்தமான நிலபுலன்களும் இவற்றில் அடங்குகின்றன.
இந்த மாவட்டத்தில்  முப்படையினரும் விசேடமாக இராணுவத்தின் 6 பிறிகேட்களும் எண்ணிலடங்காத படைமுகாம்களும் இருக்கின்றன. இந்த சின்னஞ்சிறிய மாவட்டத்தில் இவ்வளவு பெரிய இராணுவ பலம் எதற்கு?
இந்த மாவட்டத்தை சிங்கள மய மாக்குவதற்கா?
ஏற்கனவே பல தமிழ்க் கிராமங்கள் சிங்கள மயமாகியுள்ளன. பெரிய விளாங்குளம் - மாதிவுல்வௌ ஆகியுள்ளது முதலைக்குளம் - மொறவௌ ஆகியுள்ளது. இப்படி பல கிராமங்கள். ஒரு காலத்தில் தமிழ் நகரங்களாக இருந்த நீர்கொழும்பு, சிலாபம் என்பன இப்போது மீகமுக ஆகவும் கலாவத்த ஆகவும் மக்களாலும் பெயராலும் சிங்கள மயமாகியுள்ளன.
இராணுவத்தினரும் கடற்படையினரும் பல்வேறு வகையான சொந்த முயற்சிகள் மூலமாக தோட்டம் செய்யவும், மீன் பிடிக்கவும், செங்கற்சூளை நடாத்தவும் ஆரம்பித்துள்ளனர். இவற்றைத் தங்களுடைய சொந்த பொருளீட்டும் முயற்சியாகவே கொண்டுள்ளனர்.
இந்தச் சூழமைவில் தான் நாம் இன்று எமது முதலாவது கூட்டத்தை நடாத்துகின்றோம்.
இதன் பயணம் சுமுகமானதாகவும் வெற்றிகளை அள்ளிக்குவிக்கும் அமைப்பாகவும் தனது ஆட்சிக்காலத்தை கொண்டிருக்க பிராத்தித்து எனது கன்னியுரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி.

வட மாகாணசபையின் அமர்வின் போது இலங்கை தமிழ்; அரசு கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் பிறிமுஸ் சிராய்வா அவர்களின் கன்னி உரை Reviewed by Author on November 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.