திருப்பியனுப்பப்பட்ட காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்று இடைவழியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படும் காணாமல் போனோரின் உறவினர்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் ஒன்றுகூடி இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது காணாமல் போனதாகக் கூறப்படும் உறவினர்களின் புகைப்படங்களை ஏந்தியவண்ணம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், தங்களுக்கு நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு, சிறிகொத்தாவில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள மனித உரிமை விழாவில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற காணாமல் போனோரின் உறவினர்களே இடைவழியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் உபதலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 3 பஸ் வண்டிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை காணாமல் போனோரின் உறவினர்கள் புறப்பட்டுச்
சென்றனர்.
இவர்கள் மதவாச்சியிலிருந்து பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து புறப்பட்டுச் சென்ற சுமார் 400 இற்கும் மேற்பட்டோர் மதவாச்சியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள், வவுனியா நகரசபை மைதானத்தை வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்ட இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ளனர்.
திருப்பியனுப்பப்பட்ட காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
November 13, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 13, 2013
Rating:


No comments:
Post a Comment