சமூக நன்மைக்கு இடையூறு செய்கின்றவர்களை எமது சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும்: வட மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்
தீமைகளைக் கண்டு மௌனிகளாக நாம் இருப்போம் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனமானது. நாம் சமூகத் தீமைகளுக்கு எதிராக செயலாற்றவேண்டும். சமூக நன்மைக்கு இடையூறு செய்கின்றவர்களை எமது சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும். இதற்காக நாம் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியற் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் (நளீமி) தெரிவித்தார்.
யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் பொன்விழா நிகழ்வு நேற்று (28.12.2013) கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்படிக் கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றும்போது,
"புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே, அவனது தூதர் எம் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலாமும் ஸலவாத்தும் சொல்லியவனாக…
இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கிக்கொண்டிருக்கின்ற தலைவர் அவர்களே! ஏனைய அதிதிகளே! நிகழ்வில் பங்கேற்றிருக்கின்ற பெரியோர்களே! தாய்மார்களே! மாணவ மாணவிகளே! உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
யாழ் ஒஸ்மானியாவின் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்திருக்கின்றது. ஒரு நீண்டவரலாற்றை நினைவுபடுத்துகின்ற, ஞாபகங்களை மீட்டிப்பார்க்கின்ற, எதிர்காலத்தை நம்பிக்கையோடு தொடங்குகின்ற ஒரு நாளாக இந்த பொன்விழா நாள் பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் இந்த நிகழ்வில் நானும் ஒரு அங்கமாக பங்கேற்றிருப்பது மனமகிழ்வைத் தருகின்றது. இவ்விடத்தில் பல்வேறுபட்ட விடயங்களை முன்வைக்கவேண்டிய தேவை இருக்கின்றதாயினும், மிகவும் சுருக்கமாக ஒருசில விடயங்களைத் தொட்டுச்செல்வது பொருத்தம் என நினைக்கின்றேன்.
1990ம் ஆண்டு வடக்கு மண்ணில் முஸ்லிம்களின் மீது நிகழ்த்தப்பட்ட பலவந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை எமது வாழ்வின் எல்லாத் தளங்களையும் பாதித்தது. அதன் ஒரு அம்சமாக கல்வி நிலையங்களும் பாதிப்புக்குள்ளாயின. யாழ். ஒஸ்மானியா கல்லூரியும் 1990-2003 வரை இயங்கா நிறுவனமாக கைவிடப்பட்டிருந்தது. 2003களில் இக்கல்லூரியினை மீளவும் திறக்கவேண்டும், இதன் இயக்கத்தை தொடக்கவேண்டும் என்று ஒரு சில சமூக ஆர்வலர்கள் சிந்தித்தபோது எம் சமூகத்தைச் சேர்ந்த பலர் தமது விருப்பமின்மைகளைத் தெரிவித்திருந்தார்கள். எனினும் அல்லாஹ்வுடைய உதவியானால் கல்லூரி மீளவும் திறக்கப்பட்டது. இன்று யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் வளர்ச்சிப்பாதைக்கான வழி அன்று மீளத்திறப்பின் மூலம் தொடக்கப்பட்டது.
அந்தவகையில் கல்லூரியின் மீளத்திறப்பில் முயற்சித்த உழைத்த அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்களே. கல்லூரியைத் திறக்கின்ற காலம் அச்சுறுத்தல்கள் நிலவிய காலம், கஷ்டங்களும் சிக்கல்களும் நிலவிய காலம், இந்தக் காலத்தில் இதனை முன்னின்று நடாத்துவதற்குரிய பொறுப்பினை, அதிபர் என்ற ஒரு பாரிய பொறுப்பினை எமது அன்புக்குரிய சகோதரர் அஷ்-ஷெய்க் முபாரக் (நளீமி) அவர்கள் பலரது ஆலோசனைகளுக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க தனதாக்கிக்கொண்டார்கள். அந்தவகையில் அவரும் பாராட்டுக்குரியவரே, அதே போன்று யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தில் இருந்து எவருமே ஆசிரியர்களாக கடமையாற்ற முன்வராத சூழ்நிலையில் யாழ்ப்பாண மண்ணில் இருந்து முஸ்லிம் அடையாளத்துடன் கூடிய பாடசாலையில் சேவையாற்ற இனத்துவ அடையாளங்கள் வேறுபாடுகளை மறந்து இந்த இடத்தில் கல்விச் செயற்பாடுகளில் பங்கேற்க முன்வந்த தமிழ், கிறிஸ்த்த சமூகத்து ஆசிரியர்களை, ஆசிரியைகளை இவ்விடத்தில் நன்றியோடு ஞாபகப்படுத்துவதும் எனது பொறுப்பாக இருக்கின்றது. யாழ். முஸ்லிம் சமூகம் சார்பாக அவர்களுக்கு எமது நன்றியறிதல்களை முன்வைக்கின்றேன்.
அதுமாத்திரமல்ல, பல்வேறு அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், கல்வி அதிகாரிகள் யாழ். ஒஸ்மானியாவின் வளர்ச்சியில் பங்களிப்புகளை நல்கியிருக்கின்றார்கள் அவர்களையும் இந்த இடத்தில் விட்டுச்செல்ல முடியாது. கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கௌரவ அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் அவர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்கள், வடக்கு மாகாண ஆளுனர் கௌரவ சந்திரசிறி அவர்கள் முன்னைய நாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. இளங்கோவன் அவர்கள் என பலரும் ஒஸ்மானியாவின் வளர்ச்சியில் பங்கேற்றிருக்கின்றார்கள், அவர்களை நினைவுகூர்வது என்னுடைய கடமை என நினைக்கின்றேன்.
ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக, ஒரு சமூகத்தின் அச்சாணியாக, ஒரு சமூகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது கல்வி. இதனை நீண்டநேரம் விளக்க வேண்டிய அவசியம் இருக்காது. யுத்தத்திற்குப் பின்னரான சூழலில், அல்லது மீளக்குடியேற்றம் நடைபெறுகின்ற சூழலில் குறிப்பாக எமது மண்ணில் கல்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. எமது சமூகத்தின் எதிர்காலம் குறித்து சிந்திக்கின்றபோது கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்பதை நாம் உணர்ந்துகொள்வோம். அந்தவகையில் யாழ். ஒஸ்மானியா தனித்து பாடசாலை சமூகத்தின் பங்களிப்போடு மட்டும் செயலாற்ற அல்லது முன்னோக்கிப் பயனிக்க முடியாது. மாற்றமாக யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்போடு அது முன்னேறவேண்டும், யாழ். முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இவ்விடயத்தில் இதயசுத்தியோடு “கல்விக்காக ஒத்துழைத்தல்” என்னும் ஒழுங்கில் பங்களிப்புச் செய்வதற்கு முன்வரவேண்டும்.
யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தில் பொதுவான ஒரு பலவீனத்தை நான் காணுகின்றேன். “தீமைகளைக் கண்டுகொள்ளாத சமூகம்” என்று நான் இதனை அடையாளப்படுத்த விளைகின்றேன். இந்த மஹ்மூத் மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது என் அருகில் இருந்த நண்பர் ஒருவர் வினவினார் மஹ்மூத் மண்டபத்தின் புனரமைக்கப்பட்ட கூரையினைப் பார்த்தீர்களா? இத்தனை பிரமாண்டமான கூரையினைத்தானே கள்வர்கள் சூரையாடினார்கள், பல வாரங்கள் வேலை செய்தால்தானே இதனை அவர்களால் கழற்றி அப்புறப்படுத்தியிருக்க முடியும் என்று அங்கலாய்ப்புடன் கேட்டார். உண்மைதான் 1998களின் பின்னர் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்திற்குள் புகுந்த கள்வர்கள்தான் இதனைக் கழற்றிச் சென்றார்கள். அப்போதும் எமது மண்ணில் இருந்த “யாழ் முஸ்லிம்கள்” சமூகத் தீமைக்கு எதிராக குரல்கொடுக்க, செயலாற்ற முன்வராத காரணத்தினால் யாழ். ஒஸ்மானியா போன்ற பல சொத்துக்களை நாம் இழந்தோம். ஆனால் தொடர்ந்தும் தீமைகளைக் கண்டு மௌனிகளாக நாம் இருப்போம் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனமானது. நாம் சமூகத் தீமைகளுக்கு எதிராக செயலாற்றவேண்டும். சமூக நன்மைக்கு இடையூறு செய்கின்றவர்களை எமது சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும். இதற்காக நாம் ஒன்றுபட்டு செயலாற்றவேண்டும்.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியினை ஒரு சிலர் தமது பணபலத்தால் விலைக்கு வாங்க முயற்சித்தார்கள். இன்னும் சிலர் அதிகாரத்தைக் கொண்டு ஆட்டிப்படைக்க நினைத்தார்கள். இன்னும் சிலரோ தமது தந்திரத்தால் வெல்லலாம் என நினைத்தார்கள் எதுவுமே வெற்றியடையவில்லை. யாழ். ஒஸ்மானியாவை யாழ். முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால சமூகத்தின் நலனுக்கான கல்விச்செயற்பாடுகளை நோக்காககொண்டு மட்டுமே பயன்படுத்தவேண்டும், மாற்றமாக தமது சுயநலங்களையும், அபிலாஷைகளையும், அரசியலையும், அதிகாரத்தையும் அரங்கேற்ற எவரேனும் முனைவார்களாக இருந்தால் அதற்கு எதிராக நாம் செயற்படுவோம் இன்ஷா அல்லாஹ். அத்தகைய நஜீஸ்களை நாம் அப்புறப்படுத்தவேண்டும்
யாழ். ஒஸ்மானியா கல்லூரி இன நல்லுறவின் அடையாளமாக இருக்கவேண்டும். மாறாக இனமுரண்பாட்டின் தொட்டிலாக அது அமைந்துவிடக்கூடாது. நாம் இங்கே கல்வி கற்பிக்கின்ற முஸ்லிமல்லாத ஆசிரியர்களை மதிக்கின்றோம், கௌரவிக்கின்றோம், அவர்களால் நல்ல பங்களிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன, அதேபோன்று இந்த சூழலில் வாழ்கின்ற முஸ்லிமல்லாத மாணவ மாணவிகளையும் எமது கல்லூரியில் இணையும்படி நாம் அழைப்பு விடுக்கின்றோம். இன நல்லுறவிற்கு பாதிப்பு ஏற்படும்வகையில் எவரேனும் செயற்படுவதை நாம் வரவேற்கமுடியாது.
யாழ். ஒஸ்மானியாவின் வளர்ச்சியென்பது யாழ். முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒழுங்கமைக்கப்படவேண்டும் என்பதற்காகவே யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒரு சிலர் தமது அறியாமையாலும் சுயநல நோக்கினாலும், பதவிப்பிரியத்தினாலும் அதனை இயங்காது தேக்கநிலைக்குள் தள்ளிவிட்டிருக்கின்றார்கள். யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் மீளவும் இயங்கவேண்டும், அது யாழ். ஒஸ்மானியாவில் வளர்ச்சியிலும் காத்திரமான பங்களிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பையும் இவ்விடத்தில் வெளிப்படுத்துகின்றேன்.
யாழ். ஒஸ்மானியாவின் பொன்விழா நிகழ்வுகள் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறவேண்டும் என்பதற்காக வல்லவன் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து, எம்மாலான பங்களிப்புகளை நாம் ஒஸ்மானியாவின் வளர்ச்சிக்கு வழங்குவோம்" என தெரிவித்தார்.
சமூக நன்மைக்கு இடையூறு செய்கின்றவர்களை எமது சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும்: வட மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்
Reviewed by Admin
on
December 29, 2013
Rating:

No comments:
Post a Comment