மன்னார் புதைகுழியை ஆராய சர்வதேச நிபுணர் குழு அவசியம்.
" மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் மனிதப்புதைகுழியைத் தோண்டி அதை ஆய்வுசெய்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவை இலங்கை அரசு உடன் அழைக்க வேண்டும் அப்போது தான் உண்மை கண்டறியப்படும் உள்நாட்டு நிபுணர் குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை "
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு , கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் . எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் மன்னார் புதைகுழியின் உண்மை நிலைவரத்தை வெளிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் . இல்லையெனில் , இலங்கை அரசுக்குத்தான் அது ஆபத்தாக அமையும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
கடந்த 20 ஆம் திகதி மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து தொடர்ச்சியாக பல மனிதச் சடலங்களின் எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன .
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் , சிவசக்தி ஆனந்தன் , பொன் . செல்வராஜா , பா . அரியநேத்திரன் ஆகியோர் நேற்றுக் கருத்துக்களை வெளியிட்டனர் .
இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது :
" போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமற்போன தமிழ் உறவுகளின் எலும்புக்கூடுகளே மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருக்கலாம் என மன்னார் ஆயர் சந்தேகம் வெளியிட்டுள்ளார் .
அத்துடன் , இதுதொடர்பில் சர்வதேச விசாரணை உடன் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் . அவரின் இந்த வலியுறுத்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது .
மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க இது தொடர்பில் சர்வதேச விசாரணை உடன் தேவை . ஏனெனில் , இந்த மனிதப் புதைகுழி இனப் படுகொலைக்கு ஒரு சான்றாக இருக்கின்றது .
இந்தப் புதைகுழியைத் தோண்டி அதை ஆய்வுசெய்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவை இலங்கை அரசு உடன் அழைக்கவேண்டும் . அப்போதுதான் உண்மை கண்டறியப்படும் . தற்போது புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிபுணர் குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை . அவர்கள் அரசின் கருத்துகளுக்கே செவிசாய்ப்பார்கள் .
நத்தார் தினம் , புதுவருடம் என்று அடிக்கடி புதைகுழியைத் தோண்டும் பணியை நிறுத்திவைக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை . இவ்வாறு புதைகுழியை தோண்டும் பணிகள் திடீர்திடீரென நிறுத்தப்படுவது எமக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
செம்மணி மனிதப் புதைகுழி போன்று இதனையும் கிடப்பில் போட அரசு முயற்சிக்கக் கூடாது . தனக்குக் கெட்ட பெயர் வந்துவிடும் என்ற அச்சத்தில் மன்னார் புதைகுழியின் உண்மை நிலைவரத்தை அரசு மூடிமறைக்கக் கூடும் .
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் மன்னார் புதைகுழியின் உண்மை நிலைவரத்தை வெளிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . இல்லையெனில் , இலங்கை அரசுக்குத்தான் அது ஆபத்தாக முடியும் . பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி யைப் பெற்றுக்கொடுக்க வேண் டும் , குற்றமிழைத் தவர்களுக் குத் தண்டனை வழங்க வேண்டும் , சர்வதேசத்தில் நல்ல பெயரை எடுக்கவேண் டும் என்ற நல்ல நோக்கங்கள் உண்மையாகவே இலங்கை அரசுக்கு இருக்குமானால் இதனை அரசு உடனடியாகச் செய்யவேண்டும் " - என்றனர் .
மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க இது தொடர்பில் சர்வதேச விசாரணை உடன் தேவை
மன்னார் புதைகுழியை ஆராய சர்வதேச நிபுணர் குழு அவசியம்.
Reviewed by Admin
on
December 31, 2013
Rating:

No comments:
Post a Comment