மன்னாரில் உள்ள பிரபல பாடசாலைகள் சிலவற்றில் தரம்-01 இல் மாணவர்களை அனுமதிக்க பணம் அறவீடு. பெற்றோர் விசனம்.
தரம் -01 இற்கு இவ்வருடம் புதிதாக மாணவர்களை சேர்த்துக்கொள்ளுவதற்காக மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலைகள் சிலவற்றில் அதிகமான பணம் அறவீடு செய்யப்பட்டு வருவதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர் .
இவ்வருடம் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் மாணவர்களுக்கான முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் பாடசாலைகளுக்கு சென்று வருகின்றனர் .
இந்த நிலையில் மன்னாரில் உள்ள பிரபல பாடசாலைகள் சிலவற்றில் மாணவர்களை தரம் -01 இற்கு அனுமதிக்க நன்கொடை என்ற பெயரில் அதிகமான பணம் அறவீடு செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவித்துள்ளனர் .
மாணவர்களை பாடசாலையில் அனுமதிப்பதற்காக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் , பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றை பயன்படுத்தியே குறித்த பணம் பெற்றோரிடம் அறவீடு செய்யப்பட்டு வருகின்றதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர் .
சுமார் 3 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை இவ்வாறு பணம் அறவீடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர் .
பணம் தர மறுக்கும் பெற்றோருடன் அவர்கள் தர்க்கத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர் .
எனவே கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு எதிராக அரச பாடசாலைகள் சில நன்கொடை என்ற பெயரில் இலஞ்சம் பெற்று வருகின்றனர் .
இப்பிரச்சினை கடந்த வருடம் இடம் பெற்ற நிலையில் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளரின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு செல்லப்பட்ட போதும் எது வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர் .
எனவே இவ்விடயத்தில் வடமாகாண கல்வி அமைச்சர் துரித நடவடிக்கையில் செயற்பட்டு நன்கொடை என்ற பெயரில் இலஞ்சம் பெறும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவித்துள்ளனர் .
இதே வேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் எவ்வித எதிர்பார்ப்புக்களும் இன்றி மாணவர்களை தரம் -01 இற்கு அனுமதித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .
மன்னாரில் உள்ள பிரபல பாடசாலைகள் சிலவற்றில் தரம்-01 இல் மாணவர்களை அனுமதிக்க பணம் அறவீடு. பெற்றோர் விசனம்.
Reviewed by Admin
on
January 09, 2014
Rating:

No comments:
Post a Comment