2014ம் ஆண்டுக்கான வட மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று! ஆளுநர் வழங்கிய நியமனங்களை இடைநிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!
வட மாகாண சபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்று கைதடியிலுள்ள வட மாகாண சபை கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது வட மாகாணத்தின் கலை, கலாசார பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையில் புதிதாக செதுக்கப்பட்ட செங்கோல் மற்றும் வட மாகாணத்திற்கான கொடி என்பன முதன் முதலாக சபைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தனர்.
வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தமக்கு சபை அமர்வுகளில் கலந்து கொள்வதில் இருந்து விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, தவிசாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு முதலமைச்சர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதேவேளை தொடர்ந்து 3 அமர்வுகளுக்கு சமூகமளிக்காத சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று பிரசன்னமாகி தனது கன்னியுரையை நிகழ்த்தினார்.
இதனையடுத்து சபையில் உரை நிகழ்திய முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சபைக்கு தெளிவுபடுத்தினார்.
இதேவேளை தற்காலிக சுகாதார தொண்டர் ஊழியர் நியமனம் தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று கருத்து தெரிவித்தார்.
அதேவேளை, ஆளுநர் சந்திரசிறியின் தன்னிச்சையான அண்மைய அரச நியமனங்களை தற்காலிகமாக இடைநிறுத்த வட மாகாணசபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அண்மைக்காலமாக அதுவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை ஆட்சிப் பீடமேறிய பின்னரும் முறையற்ற வகையில் ஆளுநர் சந்திரசிறியினால் வடமாகாணசபையில் நியமனங்கள் வழங்கப்படுகின்றமை தொடர்பான விடயம் கவனத்தை ஈர்த்திருந்தது.
இதையடுத்தே ஆளுநரால் வழங்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்படாத ஆளணி நியமனங்கள் அனைத்தினையும் நிறுத்த உடனடியாக ஏகமனதாக வடமாகாணசபை தீர்மானத்துள்ளது.
குறிப்பாக ஆளுநரது பணிப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் உள்ளுராட்சி மன்றங்களிற்கான ஆட்சேர்ப்பினையும் தடுத்து நிறுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2014ம் ஆண்டுக்கான வட மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று! ஆளுநர் வழங்கிய நியமனங்களை இடைநிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!
Reviewed by Admin
on
January 09, 2014
Rating:

No comments:
Post a Comment