அண்மைய செய்திகள்

recent
-

'பௌத்த மதமும் இந்து மதப் பாரம்பரியத்திற்குள்ளேயே உள்ளடங்கும்' விக்கினேஸ்வரன்.

பௌத்த மதமும் இந்து மதப் பாரம்பரியத்தினுள் அடங்கும் என்றே கொள்ள வேண்டும் என
வடக்கு மாகாகண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார் .

தவ முனிவரின் தவமந்திரம் எனும் நூலின் அறிமுக விழா சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் மண்டபத்தில்  நேற்று மலை நடைபெற்ற பொழுது நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

அரசியல் என்ற அகலமான பயங்கரமான காட்டினுள் பவனி வரும்போது எங்கோ ஒரு இடத்தில் ஒரு குட்டிக் கோயில் குறுக்கே வந்தால் எந்தளவு குதூகலம் ஏற்படுமோ அவ்வாறான குதூகலத்தைப் பெற்றுள்ளேன் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுவதால் .

காரணம் அரசியல் எம்மை அஞ்ஞானத்தினுள் ஆழ்த்த வல்லது . ஆன்மீகம் எம்மை மெஞ்ஞானம் நோக்கி ஆற்றுப் படுத்தும் தன்மையது . மெஞ்ஞானம் நோக்கி மெல்லென மெருகு பெற்று மேவுறும் நேரத்திலே மேலார் என்னைப் பெயர்த்தெடுத்து அரசியலை மேற்கொள்ளுமாறு ஆழ்த்தி விட்டனர் . விதியை வெல்ல யாரால் முடியும் ? வேண்டாம் என்று ஆறுமாதங்களாக விலக்கி வைத்திருந்த அரசியல் எவ்வாறு என்னைத் தன்பால் இழுத்தெடுத்ததோ என்பது எனக்கு இன்னமும் பிரமிப்பாக இருக்கின்றது . ஏதோ ஒரு முன்வினைதான் என்னை முயன்றிழுத்து இந்த முடிவிலா அரசியல் முயற்சியில் மூழ்கச் செய்திருப்பதாக உணர்கின்றேன் . சில வேளைகளில் எம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை எம்மால் புரிந்து கொள்ள முடியாது .

ரிஷிகேசத்தில் சிவானந்தா ஆசிரமத்தில் ஒரு இளம் சுவாமி இருந்தார் . மிகவும் உயர்வான நிலையை அவர் அடைந்திருந்ததாகவும் மிகவும் கண்ணியமானவர் என்றும் தியானத்தில் சிறந்த நிலை அடைந்தவர் என்றும் அவரை உலகம் அடையாளம் கண்டிருந்தது . ஒரு நாள் அதிகாலை நான்கு மணிக்கு அவர் கங்கைக்கு நீராடச் சென்றார் . அப்பொழுது ஒரு உயர்ந்த இடத்தில் இருந்து இருவர் கங்கையினுள் குதிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர் .

சுவாமி அவர்களை உடனே அண்மித்து ' இந்த நேரத்தில் நீங்கள் இங்கு என்ன செய்கின்றீர்கள் ? ' என்று கேட்டார் . ' சுவாமி ! இது என் பேத்தி . அவள் அழகற்றவள் . தாய் தந்தையரை இழந்தவள் . அவளுக்கு ஒரு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று பல காலம் பிரயத்தனங்கள் எடுத்தும் அவையாவும் தோல்வியில் முடிந்துள்ளன . நாங்கள் மிகவும் வறியவர்கள் . இன்றுதான் நாங்கள் முடிவெடுத்தோம் - ' இவ்வாறே நாங்கள் வாழ்வதில் பயனில்லை . இருவருமே சேர்ந்து கங்கையில் விழுந்து உயிரை விட்டு விடுவோம் ' என்று . அத்துடன் எனக்குக் கண்பார்வையும் மங்கியுள்ளது . வேலை செய்து பிழைக்கவும் வயதில்லை ' . என்றார் . ' உங்கள் உயிரை நீங்களே மாய்த்துக் கொள்வது பாபமல்லவா ' என்று கேட்டார் சுவாமி . ' நாங்கள் தொடர்ந்து செத்தும் சாகாமல் இருப்பதுதான் பாபம் ' என்றார் முதியவர் . ' சரி ! உங்கள் பேத்தியாரை ஒருவர் திருமணஞ் செய்தால் நீங்கள் உங்கள் முடிவை மாற்றுவீர்கள் அல்லவா ? ' என்று கேட்டார் சுவாமி . ' ஆமாம் ! ஆனால் அவள் ஒரு குரூபி .

அவளுக்கே அவள்மீது வெறுப்பு ' என்றார் முதியவர் . பெண்ணைச் சரியாக நிலவொளியில் பார்க்காமலே சுவாமி சொன்னார் - ' நான் அவளைத் திருமணம் செய்து கொள்கின்றேன் . சம்மதமா ? ' என்றார் சுவாமி . ' கரும்பு தின்னக் கூலி வேண்டுமா சுவாமி ? எப்படி ஆனால் ? நீங்கள் ஒரு சுவாமியாயிற்றே ' என்றார் பெரியவர் . ' உங்கள் நிலையறிந்து உங்களை மரணத்தில் இருந்து காக்க நான் செய்யும் காரியம் பாவம் ஆகாது என்றே நம்புகின்றேன் ' என்றார் சுவாமி .

திருமணமாகியது . சுவாமி கௌபீனத்தை கங்கையில் வீசிவிட்டு வேட்டி கட்டி குடும்ப வாழ்க்கைக்குள் பிரவேசித்தார் . விறகு வெட்டி விற்று சம்பாத்யம் பெற்று முதியவரையும் அவரின் பேத்தியான தமது மனைவியையும் பராமரித்து வந்தார் . சில காலத்தில் கிழவர் இறந்து விட்டார் . அதன் பின் ஒரு குழந்தையை ஈன்று பாரம் கொடுத்துவிட்டு மகப்பேற்றின்போதே உயிர் நீத்தார் சுவாமியின் மனைவி . குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு பராமரிப்பு அகத்தில் குழந்தையைக் கொடுத்து விட்டு சுவாமி மீண்டும் சிவானந்த ஆசிரமம் வந்தார் . அவரைக் கண்ட உடனேயே மற்றைய சுவாமிமார்கள் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டார்கள் . அவருடன் பேசவில்லை . இதை சுவாமி சிவானந்தரிடம் சொன்னார்கள் அவரின் சிஷ்யர்கள் . அவர் எல்லோரையும் அழைத்து ' இவர் மீது கோபம் கொள்ளாதீர்கள் .

இரு உயிர்களைக் காக்க அந்த நேரத்தில் எது முக்கியம் என்று அவருக்குப் பட்டதோ அதைத்தான் செய்தார் . அவர் மீண்டும் சந்யாச தீட்சை பெற வந்துள்ளார் . அதைக் கொடுக்காது விடக் கூடாது ' என்று கூறிவிட்டு ' இதில் இன்னொன்று உள்ளது . இவரின் சந்யாச வாழ்க்கை சித்தி அடையமுன் கிரகஸ்த வாழ்க்கை ஒன்று வாழ வேண்டும் என்பது அவரின் ப்ராப்தம் . அதையே அவர் செய்து விட்டு வந்துள்ளார் . இனி இவர் விரைவில் ஆத்மீகத்தில் சிறந்து விளங்குவார் ' என்றும் கூறினார் .
எனவே ஆத்மீகம் இனி சித்திக்குமோ சித்தியாதோ எனக்குத் தெரியாது . ஆனால் எது என் கடமை என்று அப்பொழுது பட்டதோ அதை நான் செய்ய முன்வந்தேன் . இருப்பினும் என் பழைய வாழ்க்கையை நினைவுறுத்தும் சம்பவங்கள் நடைபெறும் போது மனதுக்கு இதமாகவே இருக்கின்றது . இப்பேர்ப்பட்ட நூல் அறிமுக விழாக்களில் பங்கு பற்றுவது எனது பழைய வாழ்க்கையின் ஒரு அம்சமாக இருந்து வந்தது .

இன்று ஒரு முக்கியமான நூல் வெளியிடப்படுகிறது . சிவ மகாலிங்கம் அவர்கள் எழுதிய ' தவ முனிவனின் தமிழ் மந்திரம் ' என்ற நூலே அது . வெளியீட்டுரையைத் தம்பி ஆறுதிருமுருகன் நிகழ்த்தவிருக்கின்றார் . நயப்புரையை இளைப்பாறிய அதிபர் சிற்பி திரு.சி. சிவசரவணபவன் அவர்கள் அளிக்கவிருக்கின்றார்கள் . அவர்கள் கடமைகளுக்குள் நான் குறுக்கிடாமல் என் மனதிற்குப் பிடித்த சில விடயங்களை என் பிரதம அதிதியுரையில் பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன் .

2006 ம் ஆண்டு ஆடி மாதத்தில் இருந்து 2011 ம் ஆண்டு சித்திரை வரை ' தவமுனிவனின் தமிழ் மந்திரம் ' என்ற தலைப்பில் ஆசிரியர் சிவ மகாலிங்கம் அவர்கள் எழுதிய 45 கட்டுரைகளே நூல் வடிவில் அதே தலையங்கத்துடன் இன்று உங்கள் கைகளில் தவழுகின்றன .

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில்த்தான் நான் வாராவாரம் ஞாயிறு தினக்குரலில் ' நம்முள் ' என்ற தலையங்கத்தில் சரித்திரம் சார்பான கட்டுரைகளை எழுதி வந்திருந்தேன் .

திருமூலரின் கருத்தொன்றை எடுத்து அதை முன்னிறுத்தியே கட்டுரை ஆக்கியுள்ளார் ஆசிரியர் . இவ்வாறான கட்டுரைகளில் இரண்டு முக்கிய கருத்துக்கள் என் கவனத்தை ஈர்த்தன . ஒன்று ' குருவருளின்றித் திருவருள் இல்லை ' என்பது . இது நான்காவது கட்டுரை . அடுத்தது ' சிவமூலமந்திரம் மந்திரயோகம் ' என்ற கட்டுரை . இது 17 வது கட்டுரை . இந்த இரண்டு தலையங்கங்களின் கீழ் நானும் பேருரைகள் ஆற்றியுள்ளேன் . எனக்கு மிகவும் பிடித்தமான விடயங்கள் அவை . ஆனால் என் உசா நூல்கள் யாவற்றையும் கொழும்பில் விட்டு விட்டு வந்துவிட்டேன் . நினைவில் இருப்பவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் .

முதலில் குரு அருள் பற்றிப் பார்ப்போம் . எந்த ஒரு செயற்பாட்டிலும் நாம் திறமை எய்துவதாகில் பொதுவாக அதற்குப் புற உதவி தேவையாய் இருக்கின்றது . ஒரு ஆசிரியரோ , அறிந்தவரோ , அனுபவஸ்தரோ எமக்கு அச்செயற்பாட்டைப் பற்றிய அறிவையும் அனுபவத்தையும் பெற உதவி செய்யவேண்டியிருக்கின்றது . நூல்களும் உதவி செய்கின்றன .

ஆனால் ஆத்மீகத்தில் நூல்களின் பங்கு மிகக் குறைவாகவே கணிக்கப்படுகின்றன . வாழ்நாட்கள் முழுவதும் நூல்களைக் கற்கலாம் . மகா மேதைகள் ஆகலாம் . ஆனால் ஆன்மீகத்தில் அப்பேர்ப்பட்ட அறிவு எம்மை எங்கும் கொண்டு செல்வதில்லை . இன்றைய பௌத்த பிக்குகள் பலரைக் கொழும்பில் சந்தித்திருக்கின்றேன் . நன்றாக மதம் பற்றிப் பேசுவார்கள் . நூல்களில் இருந்து பாளியிலும் சிங்களத்திலும் ; மேற்கோள்கள் காட்டிப் பேசுவார்கள் . புத்தர் சொன்னதை ஒப்புவிப்பார்கள் . விமர்சனம் செய்வார்கள் . ஆனால் அவர்கள் இடையே மிகச் சாதாரணமான அன்பும் , பண்பும் , மனித நேயமும் அற்றிருப்பதைக் கண்டுள்ளேன் . அவர்களின் ஆன்மீகம் வெறும் பேச்சு ஆன்மீகம் பேறு அற்ற ஆன்மீகம் அது .

உண்மையான ஆன்மீகம் எம்முள் வளர்ச்சி அடைய வேண்டுமானால் குரு ஒருவர் தேவைப்படுகின்றார் . விவேகானந்தர் கூறுவார் ' நூல்களைக் கரைத்துக் குடிப்பதன் காரணமாக ஆன்மீக வாழ்விலும் முன்னேறியிருக்கின்றோம் என்று எண்ணுவது ஒரு பிரமை . ஆனால் நூல்களைக் கற்பதால் வரும் பயன் என்ன என்று அலசிப் பார்ப்போமேயானால் அந்தக் கற்றறிவு முடிந்த வரையில் நமது மூளையைத்தான் ஓரளவுக்குக் கூர்மையாக்குகின்றதே தவிர நமது ஆன்மீகத்திற்கு எந்த இலாபத்தையும் வளர்ச்சியையும் அவை தரவில்லை என்பதை நாங்கள் நன்கு அறிந்து கொள்ளமுடியும் . இதற்குக் காரணம் நூலறிவின் இயலாமையேயாகும் ' என்றார் .

' என்ன சேர் ! ஆன்மீக நூலொன்றின் அறிமுக விழாவிற்கு வந்து நூலறிவால் எந்தப் பயனும் கிடையாது என்றால் என்ன அர்த்தம் ? ' என்று நீங்கள் கேட்கலாம் . ஆன்மீகத்தில் நூல்களுக்கென்று ஒரு சிறப்பான இடம் உண்டு . அது எமது தெருக்கள் தொடங்கும் இடத்தில் காணப்படும் பெயர்ப்பலகைகள் போன்ற ஒரு இடம் . இந்த கே.கே. எஸ் வீதி வழியால் சென்றால் கீரிமலை அடையலாம் என்ற அறிவைத் தரவல்லன நூல்கள் . அவை ஒரு வழிகாட்டி . ஆனால் கீரிமலைக்குச் சென்று கேணியில் இறங்கி குளித்தால்த்தான் உங்களுக்கு அந்த புண்ணிய தீர்த்தத்தின் உண்மையான பாங்கு புரியும் . பலனும் கிடைக்கும் . கீரிமலை வரையில் செல்ல நூல்கள் உதவி புரிகின்றன . கேணியில் மூழ்கி எழ ஒரு குரு வேண்டும் என்றுதான் கூறுகின்றேன் . இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே . கீரிமலைக் கேணியில் இறங்க ஒரு குரு வேண்டும் என்றார் முதல்வர் என்று பத்திரிகைகளில் பிரசுரித்து விடாதீர்கள் !

மற்றைய மதங்களில் இல்லாத ஒரு சிறப்பம்சம் இந்து மதத்திற்கு உண்டு . அதுதான் குருவை நாடி ஆன்மீகத்தில் வளர்ச்சி பெறுவது . குரு - சிஷ்ய உறவு முறை இந்து மதத்தில் பண்டு தொட்டு இருந்து வருகின்றது . இங்கு பௌத்தமும் இந்து மதப் பாரம்பரியத்தினுள் அடங்கும் என்றே கொள்ள வேண்டும் . கிறீஸ்தவம் யேசுகிறீஸ்து நாதரை மட்டுமே முன்னிறுத்துகிறது . இஸ்லாம் சல்லல்லாகி அலைவர் சல்லம் அவர்களையே முன்னிறுத்துகின்றது . பௌத்தம் குரு சிஷ்ய பரம்பரையில் வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் அது ஆன்ம ஈடேற்றத்திற்கு வழி அமைக்கும் முறையில் அல்லாது சீருடை சம்பந்தமான புற பாரம்பரியத்தையே வலியுறுத்தி வந்துள்ளது . அதை மனதிற்கெடுக்காது விட்டால் பௌத்தம் கூட மற்றைய இரு மதங்கள் போல் புத்த பகவானையே முன்னிறுத்துகின்றது .
ஆனால் இந்து மதம் அப்படியல்ல . மற்றைய மூன்று மதங்களின் தாபகர்களின் குணாம்சங்களை , அற்புதங்கள் விளைவிக்கும் ஆற்றல்களைக் கொண்ட ஆயிரமாயிரம் குரு சிரேஷ்டர்களை எமக்குத் தந்து உதவி வந்திருக்கின்றது .

ஒரு முறை யோக சுவாமி அவர்கள் சாவகச்சேரி சென்றிருந்தார் . வயல் வெளியில் அவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது ' ஹரிச்சந்திரா அங்கு கொழும்புத்துறைக்கு என்னைப் பார்க்க வந்துள்ளார் . நான் அங்கு போக வேண்டும் ' என்று கூறிவிட்டு விரைவாக நடக்கத் தொடங்கினாராம் . என் பாட்டனார் சட்டத்தரணி ஹரிச்சந்திரா அவர்கள் உண்மையில் அப்போது தான் கொழும்புத்துறைக்கு சுவாமியைப் பார்க்கச் சென்றிருந்தார் . உள்ளேயிருந்து யோகசுவாமி அவர்கள் வெளியே வந்து எனது பாட்டனாரை வரவேற்றார்களாம் . பின்னர் சாவகச்சேரி அன்பரை எனது பாட்டனார் சந்தித்த போது தான் தெரிந்து கொண்டார் அங்கு வயல் வெளியில் அந்த அன்பர் சுவாமியுடன் பேசிக் கொண்டிருந்த நேரமும் கொழும்புத்துறையில் என் பாட்டனாரை சுவாமி வரவேற்ற நேரமும் கிட்டத்தட்ட ஒரே நேரமான காலை 10 மணியென்று . ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கக் கூடிய சித்தியைப் பெற்றிருந்தார் யோகசுவாமி அவர்கள் .

சாயி பாபா அவர்கள் புட்டபர்த்தில் இருக்கும் அதே நேரத்தில் தமது பக்தர்கள் வீடுகளுக்குச் சென்று வந்ததைப் பலர் அவதானித்துள்ளார்கள் . எனவே ஆன்மீக வளர்ச்சி ஏற்படும் போது இப்பேர்ப்பட்ட சித்திகள் பல தாமாகவே எம்மை வந்தடைகின்றன . சித்திகள் பெற்ற இந்த தவசிரேஷ்டர்களை அண்டினால் திருவருள் கிடைக்கும் என்பதே இந்து மதத்தின் நிலைப்பாடு .
இதையே தமிழ் மந்திரம் குறிப்பிடுகின்றது .

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உருச் சிந்தித்தல் தானே

ஆகவே குருவைக் காண்பது , அவர் நாமம் செப்புவது , அவர் வாய்மொழியைக் கேட்பது , அவர் பற்றிச் சிந்திப்பது யாவுமே மூர்க்கப் புலன்கள் அனைத்தும் தாமாகவே எம்வசம் அடங்க வழி அமைத்து எமக்குள் தெளிவை ஏற்படுத்தும் தன்மையன என்று உறுதி கூறியுள்ளார் திருமூலர் . இங்கு தெளிவு என்பது ஆன்மஞானத்தைக் குறிக்கின்றது . ஆசிரியர் இந்நூலில் இறைவனே குருவாக வந்து எமக்கு ஞானத்தை ஊட்டுகின்றான் என்று குறிப்பிட்டுள்ளார் . அதையே குருஸ்தோத்திரமும் கூறுகின்றது -
' குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேஷ்வரஹா
குரு சாக்ஷாத் பரப்ப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ . '

என்கிறது அந்த ஸ்தோத்திரம் . அதாவது ' பிரம்மனும் குருவே விஷ்ணுவும் குருவே மகேஸ்வரனும் குருவே ஏன் அந்த ஆதி மூலமான சாக்ஷாத் பரப் ப்ரம்மம் கூட அந்த குருவே . அப்பேர்ப்பட்ட குருவுக்கு எனது வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ' என்கின்றது ஸ்லோகம் .
திருமூல மந்திரங்கள் சிலவற்றை எடுத்தாண்டு குருவருளின்றித் திருவருள் இல்லை என்ற கருத்தை ஆசிரியர் அழகாக விவரித்துள்ளார் . எந்தக் கலைக்கும் ஆசிரியர் ஒருவர் இருப்பது போல் ஆன்மீகத்திற்கும் குரு அவசியம் என்றும் அப்பேர்ப்பட்ட குருவானவர் தெய்வீக அருள் பெற்று எம்முன் வந்து எமக்குத் தீட்சை அருள்பவர் என்ற கருத்தை இந்தக் கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார் . குருமனிதன் என்று குருவை மாணிக்கவாசகர் தமது சிவபுராணத்தில் குறிப்பிட்டுள்ளதை வெளிக்கொண்டு வந்துள்ளார் ஆசிரியர் சிவ மகாலிங்கம் அவர்கள் .

அவரின் மற்றொரு கட்டுரை மந்திரயோகம் பற்றிக் குறிப்பிடுகின்றது . மந்திரங்கள் என்பவை ஒலிபற்றிய ஒரு விஞ்ஞான பூர்வமான அறிவு . சூழலைக் காக்க உருவாக்கப்பட்டவையே மந்திரங்கள் . ' மனனாத் த்ராயதே இதி மந்த்ர ' என்பார்கள் . எதனை உச்சரிப்பதால் உயிர்வாழ் ஜீவராசிகளும் உள்ளனவும் சூழலும் காக்கப் படுகின்றனவோ அதுவே மந்திரம் என்பார்கள் . தொல்காப்பியம் கூறுகின்றது ' நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப ' என்று . அதாவது உண்மையான ஆன்மீக அருள் பெற்றவர்களின் வார்த்தையில் இருந்து பிறந்ததே மந்திரம் என்கின்றார் தொல்காப்பியர் . ஒவ்வொரு மந்திரமும் ஆறு பகுதிகளை அல்லது குணாம்சங்களைக் கொண்டிருக்கும் .

1 . மந்திரம் எவருக்கு இறைவனால் வெளியிடப் படுகின்றதோ அவர் மந்திரத்தின் கர்த்தா ஆவார் .
2 . மந்திரத்திற்கு ஒரு சந்தம் அல்லது உச்சரிக்கும் வண்ணம் ஒன்றுள்ளது .
3 . மந்திரம் குறிப்பிடும் ஒரு தேவதை அல்லது தெய்வம் இருக்கும் .
4 . ஒவ்வொரு மந்திரமும் ஒரு பீஜ அட்சரத்தை அல்லது விதை அல்லது மூலச் சொல்லைக் கொண்டிருக்கும் . அந்த விதைச் சொல்லே அந்த மந்திரத்தின் மிக முக்கிய பாகம் .
5 . ஒவ்வொரு மந்திரமும் வௌ ; வேறு விதமான ஒலி அலைகளைக் கொண்டிருப்பன . அந்த ஒலி அலைகளில்த்தான் அதன் சக்தி அமைந்திருக்கின்றது .
6 . ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு கீலகம் அல்லது மூட்டு ஒன்று உண்டு . அந்த மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிக்கும் போது அந்த மூட்டு மறைந்து ஒரு நதிபோல் மந்திரம் தொடர்ந்து உச்சரிப்புக்கு உள்ளாகிவரும் . அப்போது உச்சரிப்பவன் அந்த மந்திரத்தின் கருப்பொருளான அதன் தேவதையைக் காணமுடிகிறது .

ஆகவே உண்மையான மந்திரங்கள் இந்த குணாதிசயங்கள் அனைத்தையுங் கொண்டவையாக அமைவன .
ஒலி பற்றிய ஆராய்ச்சிகள் சென்ற சில நூற்றாண்டுகளாக மேற்கு நாடுகளில் நடைபெற்று வந்துள்ளன . 18 ம் நுற்றாண்டில் வசித்த ஜெர்மனிய இயல்பியல் விஞ்ஞானியான ஏர்னஸ்ட் ச்லட்னி என்பவர் ஒரு சிறிய ஆராய்ச்சி செய்து ஒலிக்கும் வடிவங்களுக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான உறவு பற்றி உலகுக்கு அறிவித்தார் . அதாவது ஒரு உருக்கினால் ஆன வட்டத்தட்டொன்றில் மிக நுண்ணிய மா போன்ற மணலைப் பரப்பி வைத்துவிட்டு வயலினில் பல ஸ்வரங்களை மீட்டினார் . அப்போது அந்த மணலில் சில மாற்றங்கள் ஏற்படுவதை எடுத்துக் காட்டினார் . அதாவது ஒரு குறிப்பிட்ட ஒலிக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் இருப்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய நவீன விஞ்ஞானி அவரே .
அவரின் பின்னர் பல ஆராய்ச்சிகள் நடந்தன . பின்னர் சில கருவிகள் உருவாக்கப்பட்டன .

ஒசிலோஸ்கோப் , டோனோஸ்கோப் என்ற பெயர்கள் உடைய கருவிகளைக் கொண்டு சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் ஹான்ஸ் ஜெனி என்பவர் ஒவ்வொரு ஒலித் தொடருக்கும் ஒரு அமைவான வடிவம் இருப்பதை கருவிகளை இயைத்து வெளிக்காட்டினார் .

' ஓம் ' என்ற பிரணவ மந்திரம் இந்தத் டோனோஸ்கோப்பினுள் உச்சரிக்கப்பட்டபோது சதுரங்களும் முக்கோணங்களும் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிய ஆரம்பித்தனவாம் . அ - உ - ம் என்று ஓம் முழுமையாக உச்சரிக்கப்பட்டபோது அக்கருவியில் காணப்பட்ட வடிவம் ஸ்ரீ யந்திரமாக மாறியமை அடையாளம் காணப்பட்டது . பராசக்தியைக் குறிப்பது ஸ்ரீ யந்திரம் . ஒலிக்கும் யந்திரங்களுக்கும் இடையில் இருக்கும் உறவை இது எடுத்துக் காட்டியது . மேலும் ஹீப்ரு , சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் எழுத்துக்களை உச்சரித்தபோது அம்மொழிகளின் அவ்வந்த எழுத்துக்கள் அக்கருவியில் காணப்பட்டனவாம் . ஆகவே ' க ' என்று உச்சரித்தால் வடமொழியின் ' க ' என்ற எழுத்து கருவியில் காணப்பட்டதாம் . இதனால்த்தான் தற்காலத்தில் மந்திரங்களுக்கு மேற்கத்தைய நாடுகளில் பெரும் வரவேற்பு இருந்து வருகின்றது . த்ரியம்பக மந்திரத்தை நாள்தோறும் உச்சரித்து வரும் பல மேநாட்டவர்களை எனக்குத் தெரியும் .

ஒருமுறை அன்றிரவே இறந்து விடுவார் என்று டாக்டர்கள் கைவிட்ட ஒரு நோயாளியின் அருகில் இருந்து கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஆத்மகணானந்தாவும் , சுவாமி இராஜேஸ்வராநந்தாவும் நானும் சேர்ந்து திரியம்பக மந்திரத்தை 108 தடவைகள் உச்சரித்தோம் . அன்றிரவு அந்த நோயாளி சாகவில்லை . சுமார் ஒரு வருடம் கழித்தே அவர் மரணித்தார் . இந்த மந்திரங்களுக்கு சூழலில் மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி உள்ளது .

' ஓம '; என்ற மந்திரம் பற்றி ஆசிரியர் தமது நூலில் கூறியுள்ளார் . ' ஓம் ' என்பதிலிருந்து எல்லா வேதங்களும் மந்திரங்களும் தோன்றின . ஆதலால் இதனைச் செபித்தால் எல்லா மந்திரங்களையுஞ் செபித்தால் உண்டாகும் பயனை அடையலாம் என்று ஆசிரியர் கூறியுள்ளார் . இதை பைபிளில் இருந்து விளக்கப்படுத்தலாம் . சென்ற் ஜோன் என்பவரின் நற்செய்தி பைபிளில் பின்வருமாறு ஆரம்பிக்கின்றது -
' முதலில் இருந்தது ஒலிச் சொல்லே . அந்தச்சொல் இறைவனிடம் இருந்தது . அந்தச் சொல்தான் இறைவன் ' என்கின்றது பைபிள் .

இந்து மதத்தின் படி அந்தச்சொல் தான் ' ஓம் ' என்பது . ' ஓம் ' என்பது சிவ பிரணவம் என்றும் ' ஹ்ரீம '; என்பது சக்தி பிரணவம் என்றுங் கூறுவர் ஞானிகள் . இந்த உலகம் இவ்விரு மூல மந்திரங்களில் இருந்து தான் உருப்பெற்றன என்று அவர்கள் கூறுவார்கள் . சிருஷ்டி , ஸ்திதி , இலயம் என்ற படைத்தல் , காத்தல் , மீளேற்றல் ஆகிய மூன்று செயற்பாடுகளும் இந்த இரு மந்திரங்களின் செயற்பாட்டில்த் தான் உருவாகின்றன என்றுங் கூறுவர் . இதன் பொருள் என்ன என்றால் படைப்புக்கு முன்னர் சிவம் தானாகவே ' ஓம் ' என்ற பிரணவத்தில் உள்நிறைந்து உறங்கிக் கொண்டிருந்தது . சிருஷ்டி காலம் வந்ததும் ' ஹ்ரீம '; என்ற சக்தி பிரணவம் கையேற்றுக் கொண்டது . அழிவு அல்லது மீளேற்றல் வந்ததும் மீண்டும் ' ஓம் ' ஒலித்துக் கொள்ளத் தொடங்கும் . ஆகவே ' ஓம் ' என்றும் பின்னர் ' ஹ்ரீம '; என்றும் இந்த அண்டசராசரம் போய்க் கொண்டிருக்கின்றது . அதாவது அத்திவாரம் ஓம் . கட்டிடம் ஹ்ரீம் . இந்த ஹ்ரீம் என்ற மூலமந்திரந்தான் குருவுக்கும் பாவிக்கப்படுகின்றது . இந்த மந்திரங்களின் மேல் எமக்கு கட்டுப்பாடு ஏற்பட்டால் இயற்கையை வெல்லலாம் என்று வேதங்கள் கூறுகின்றன .

பாரம்பரிய இந்திய இசை வல்லுனர்கள் சங்கீதம் மூலம் , மந்திரங்கள் மூலம் , ஒலியின் மூலம் இயற்கையைக் கட்டுப்படுத்தினார்கள் என்று சரித்திரம் கூறுகின்றது . அக்பர் சக்கரவத்தியின் ஆஸ்தான சங்கீத விற்பன்னரான மியான் தான்சன் என்பவர் பகல் நேரத்தில் இரவு நேர இராகத்தை இசைத்து சுற்றாடலில் இரவு நேர இருட்டை வரவழைத்தார் என்று கூறப்படுகிறது . அவரின் இசையானது மழையைக் கொண்டு வந்தது என்றும் கூறுவார்கள் . அமெரிக்க செவ்விந்தியர்கள் கூட மழையை ஏற்படுத்தும் ஒலி வடிவங்களை அறிந்திருந்தார்கள் .

பஞ்சாட்சர மந்திரம் பற்றி ஆசிரியர் கூறி மந்திர யோகத்திற்கு சிவ மூல மந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை எல்லாம் தமது நூலில் எடுத்துரைத்துள்ளார் . திருமூலர் இம்மந்திரங்களுக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பற்றிக் கூறியுள்ளார் . திருமூலரை நினைக்கவைக்கும் ஆசிரியரின் இந்த நூல் சைவமக்களுக்குப் பயனுள்ள நூல் . அதன் அறிமுக விழாவில் பங்குபற்றுவதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார் .

'பௌத்த மதமும் இந்து மதப் பாரம்பரியத்திற்குள்ளேயே உள்ளடங்கும்' விக்கினேஸ்வரன். Reviewed by NEWMANNAR on January 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.