கைது செய்தேனும் மன்னார், யாழ். ஆயர்களை விசாரிக்க வேண்டும்
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோரை கைது செய்தேனும் விசாரணைக்கு உட்படுத்தி சட்டத்தை அமுல் செய்யுமாறு கோரி ராவணா சக்தி அமை ப்பு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.நேற்று முற்பகல் வேளையில் பொலிஸ் தலைமையகத்துக்கு சென்ற ராவணா சக்தி அமைப்பின் தேசிய அமைப்பாளர் இத்தேகந்த சத்தா திஸ்ஸ தேரர் தலைமையிலான குழுவினரே இந்த கடிதத்தை கையளித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்துக்கு குறித்த தேரர் குழுவினர் சென்ற போது பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் அங்கு இல்லாத நிலையில் அந்த கடிதமானது பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் விக்ரமசேகர ஊடாக அவருக்கு கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பு மேற்கொண்டது. குறித்த கடிதத்தை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் விக்ரமசேகரவிடம் கையளித்த ராவணா சக்தி அமைப்பின் தேசிய அமைப்பாளர் சத்தாதிஸ்ஸ தேரர் அது தொடர்பில் உடன் விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு கோரினார்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோரை விஷேட விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரும் அந்த கடிதத்தில் அவர்களை கைது செய்தேனும் அந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த இரு ஆயர்களும் இலங்கை இராணுவம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலேயே அவர்களிடம் விசாரணையை மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.
கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த யுத்த குற்றங்கள் தொடர்பிலான அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீவன் ஜே.ரெப்பிடம் குறித்த இரு ஆயர்களும் உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பில் சட்டம் அமுல் செய்யப்படவேண்டும் எனவும் அந்த அமைப்பின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹணவை தொடர்புகொண்டு கேசரி வினவியது. இதன் போது கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண, குறித்த கடிதம் பொலிஸ் மா அதிபரின் கைகளுக்கு கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியதுடன் அது தொடர்பில் விசாரணை செய்வதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்துவருவதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் ராவணா சக்தி அமைப்பின் குறித்த கோரிக்கை அடங்கிய கடிதம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் இன்னும் ஒரு தீர்மானத்தை நேற்று மாலை வரை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்தேனும் மன்னார், யாழ். ஆயர்களை விசாரிக்க வேண்டும்
Reviewed by NEWMANNAR
on
January 17, 2014
Rating:

No comments:
Post a Comment