யாழ்,மன்னார் ஆயர்கள் மனிதநேயமிக்க பண்பாளர்கள் : இராதாகிருஷ்ணன்
யுத்த காலத்தில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மனித நேயம் கொண்ட யாழ்., மன்னார் ஆயர்களை கைது செய்ய வேண்டுமென இராவணா சக்தி அமைப்பு தெரிவித்துள்ள கருத்தானது வியப்பளிப்பதோடு கிறிஸ்தவர்களின் மனதைப் புண்படுத்தும் கருத்தாகுமென முன்னாள் பிரதியமைச்சரும் இ.தொ.கா. உபதலைவருமான பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இனங்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை இராவணா சக்தி முன்னெடுக்க வேண்டுமே தவிர இனக்குரோதத்தை ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இ.தொ.கா. உபதலைவர் இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளதாவது;
பெருமதிப்பிற்குரிய யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமது உயிரையும் துச்சமென மதித்து மக்களுக்கு சேவை செய்தனர். தம்மால் முடிந்தளவு மக்களைப் பாதுகாத்தனர். உணவு வழங்கினர். இன்று யுத்தம் மு-டிந்த பின்னரும் ஆயர்களின் மனிதநேயப் பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மக்களுக்காக குரல் கொடுக்கின்றனர்.
இதனை எவராலும் மறுக்க முடியாது.
ஆயர்களின் சேவைகளுக்கு இனவாத சாயம் பூசி அவர்களைக் கைது செய்ய வேண்டுமென இராவணா சக்தி அமைப்பு கூறுவது வியப்பளிப்பதோடு கிறிஸ்தவர்கள் உட்பட மனிதநேயம் கொண்ட அனைவர்களது மனங்களையும் புண்படுத்தியுள்ளது.
இவ்வாறு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி நாட்டில் இனவாதம், மதவாதம் தலைதூக்கி இனங்களிடையே தேசிய நல்லிணக்கத்திலான சந்தர்ப்பங்களிற்கான கதவுகளை மூடும் நடவடிக்கைகளை இவ்வமைப்பு கைவிட வேண்டும். மாறாக புத்த பகவான் போதித்த அஹிம்சையைக்கையிலெடுத்து நாட்டில் இனங்கள், மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து மக்களும் சமத்துவமாக, சமாதானமாக வாழ்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அன்பு செய்வதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற புத்த பகவானின் போதனைகள் இராவணா சக்தி அமைப்புக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்,மன்னார் ஆயர்கள் மனிதநேயமிக்க பண்பாளர்கள் : இராதாகிருஷ்ணன்
Reviewed by NEWMANNAR
on
January 20, 2014
Rating:

No comments:
Post a Comment